பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

479


“விசாரணை யைப் பார்க்க எல்லா ஜனங்களையும் ஏன் அனுமதிக்கவில்லை ? உறவினர்களை மட்டும் ஏன் அனுமதிக்க வேண்டும்? உங்கள் விசாரணை நேர்மையானதாக இருந்தால், எல்லோரும்தான் அதைக் கேட்டுவிட்டுப் போகட்டுமே, எதற்காகப் பயப்படுவதாம்?”

“விசாரணை நேர்மையானதல்ல. அதில் சந்தேகமே இல்லை” என்று உரத்த குரலில் ஆமோதித்தான். சமோய்லவின் தந்தை.

இந்த விசாரணையே சட்ட விரோதமானது என்பதைப் பற்றி நிகலாய் இவானவிச் விவரித்துச் சொன்ன விஷயங்களை இவனுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று தாய் திரும்பினான், ஆனால், அவன் சொன்ன விஷயங்களை அவள் பரிபூரணமாகப் புரிந்து கொள்ளவுமில்லை. மேலும் சில வார்த்தைகளும் அவளுக்கு மறந்துபோய்விட்டன. எனவே அதை ஞாபகப்படுத்திப் பார்க்க முயன்றுகொண்டே அவள் ஒரு பக்கமாக ஒதுங்கினாள். அந்தச் சமயத்தில் வெளிர் மீசைகொண்ட ஓர் இளைஞன் தன்னைக் கவனித்துக்கொண்டிருப்பதை அவள் கண்டுகொண்டாள். அவன் தன் வலது கையை கால்சராய்ப் பைக்குள் செலுத்தியிருந்தான். எனவே! அவனது இடது தோள் வலது தோளைவிடத் தணிந்திருப்பது போலத் தோன்றியது. இந்தத் தோற்றத்தை அவள் எங்கோ ஏற்கெனவே கண்ட மாதிரி இருந்தது. ஆனால் அவனோ திடீரென்று தன் முகத்தைத் திருப்பி நின்றுகொண்டான்; நினைவலைகளால் சூழப்பட்டிருந்த அவள். அவனை மறந்துவிட்டாள்.

ஒரு நிமிஷம் கழித்து அவள் காதில் ஒரு கேள்விக் குரல் விழுந்தது.

“அவளா?”

“ஆமாம்” என்று ஆர்வத்தோடு ஒலித்தது பதில்.

அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். தோளைத் தூக்கிக்கொண்டு நின்ற அந்த இளைஞன் இப்போது பக்கவாட்டில் நின்றான், கரிய தாடியும், குட்டைக் கோட்டும், முழங்கால்வரை உயர்ந்த பூட்சுகளும் கொண்ட இன்னொரு மனிதனோடு அவன் பேசிக்கொண்டிருந்தான்.

மீண்டும் அவள் தன் நினைவைத் தேடித் திரிந்தாள். அதனால் அவள் மனம் குழம்பியதுதான் மிச்சம். ஒன்றும் அவள் நினைவில் தட்டுப்படவில்லை. தனது மகனது கொள்கையை அந்த ஜனங்களுக்கு விளக்கி எடுத்துக்கூற வேண்டும். என்ற கட்டுப்படுத்த முடியாத பேராவல் அவள் மனத்தில் நிறைந்து பொங்கியது. அதைப்பற்றி இந்த ஜனங்களிடம் சொன்னால் இவர்கள் என்ன சொல்லுவார்கள். அதன் மூலம் அந்த