பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

481


தாய் தன் உடம்பு முழுவதையும் முன்னால் தள்ளிக் குனிந்து கொண்டு. ஏதோ ஒரு பயங்கரத்தைப் புதிதாக எதிர்பார்ப்பதுபோல் ஆர்வத்தோடு கவனித்தாள்.

அரசாங்க வக்கீல் நீதிபதிகளுக்கு ஒரு பக்கமாக எழுந்து நின்று மேஜைமீது ஒரு கையை ஊன்றியவாறு அவர்களைப் பார்த்துத் திரும்பினார். ஒரு பெருமூச்சோடும், வலது கையின் வீச்சோடும் அவர் பேசத் தொடங்கினார். அவரது பேச்சின் ஆரம்பத்தைத் தாயால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவரது குரல் கனத்து மெதுவாக, ஆனால் ஒழுங்கற்று, சமயங்களில் துரிதமாகவும் சமயங்களில் மந்தமாகவும் ஒலித்தது. சிறிது நேரத்துக்கு அவரது பேச்சு மெதுவாகவும் ஆயாசத்தோடும், சிரமத்தோடும் ஒலித்தது. திடீரென்று அந்தப் பேச்சு கும்மென்று இரைந்தெழுந்து சர்க்கரைக் கட்டியை மொய்க்கும் ஈக்கூட்டத்தைப்போல் ரீங்காரித்து விம்மியது. அந்தப் பேச்சில் எந்தக் கெடுதியும் இருப்பதாகத் தாய்க்குத் தோன்றவில்லை. அந்த வார்த்தைகள் பனியைப்போலக் குளிர்ந்தும், சாம்பலைப்போலக் கறுத்தும், கவிந்து குவிந்து மூடும் தூசியைப்போல் அந்த அறையில் கொஞ்சங் கொஞ்சமாக விழுந்து நிரம்பிக்கொண்டிருந்தன, வார்த்தை அலங்காரமும், உணர்ச்சியின் வறட்சியும் கொண்ட அந்தப் பேச்சு பாவெலையும் அவனது தோழர்களையும் கெஞ்சம்கூடத் தொட்டதாகத் தெரியவில்லை, எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அவர்கள் தம் பாட்டுக்கு உட்கார்ந்து அமைதியாகவும், நிதானமாகவும் தமக்குள் பேசிக்கொண்டார்கள்; புன்னகை புரிந்தார்கள்; பொங்கி வரும் சிரிப்பை மறைப்பதற்காக முகத்தைச் சுழித்துக்கொண்டார்கள்.

“அவன் பொய் சொல்கிறான்!” என்றான் சிஸோவ்.

அவள் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அவள் அரசாங்க வக்கீலின் பேச்சையே கேட்டுக்கொண்டிருந்தாள்; அவர் எல்லாக் கைதிகளையுமே பாரபட்சமில்லாமல் சகட்டுமேனிக்குக் குற்றம் சாட்டிப் பேசுவதை அவள் உணர்ந்தறிந்தாள். பாவெலைப்ற்றிப் பேசிய பின் பியோதரைப் பற்றியும் பேசினார். பியோதரைப்பற்றிய பேச்சை முடிக்கப் போகும் தருணத்தில், “புகினைப்பற்றிய பேச்சை தொடங்கினார், இப்படியாக அவர்கள் அனைவரையும் ஒரே கோணிச் சாக்குக்குள் பிடித்துத் தள்ளி மூட்டை கட்டுவதுபோல் இருந்தது அவரது பேச்சு. ஆனால் அந்தப் பேச்சின் வெளி அர்த்தத்தைக் கண்டு அவளுக்குத் திருப்தி ஏற்படவில்லை. அந்த மேலோட்டமான அர்த்தபாவம் அவளைத் தொடவும் இல்லை; கலக்கமுறச் செய்யவும் இல்லை. அவள் இன்னும் ஏதோ ஒரு பெரிய பயங்கரத்தை எதிர்பார்த்தாள், அந்தப் பயங்கரத்தை