பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

482

மக்சீம் கார்க்கி


அந்த வார்த்தைகளின் உள்ளர்த்தத்திலும், அரசாங்க வக்கீலின் முகத்திலும், கண்களிலும், குரலிலும், லாவகமாக வீசி விளாசும் அவரது வெள்ளைக் கரத்திலும் துருவித்துருவித் தேடிக்கொண்டிருந்தாள். இருந்தாலும் அதில் ஏதோ பயங்கரமிருப்பதாகத் தோன்றியது. அதை அவள் உணர்ந்தாள். எனினும் அதை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை; அதை உருவாக்கிக் காண முடியவில்லை. அவளது இதயம் எப்படித்தான் எச்சரித்த போதிலும் அவளால் அதை இனம் காணமுடியவில்லை.

அவள் நீதிபதிகளைப் பார்த்தாள். அந்தப் பேச்சைக் கேட்டு அவர்கள் அலுத்துப் போய்விட்டார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவாகத் தெரிந்தது. அவர்களது உயிரற்ற சாம்பல் நிற, மஞ்சள் மூஞ்சிகளில் எந்தவித உணர்ச்சியுமே பிரதிபலிக்கவில்லை. அரசாங்க வக்கீலின் பேச்சு கண்ணுக்குத் தெரியாத ஒரு பனி மூட்டத்தைப் பரப்பியது. அந்தப் பனிமூட்டம் நீதிபதிகளின் மீது அடர்ந்து கவிந்தது. அலுப்போடும் வேண்டாவெறுப்போடும் காத்திருக்கும்படி, அவர்களை நிர்ப்பந்தித்தது. பிரதம நீதிபதி தமது ஆசனத்திலேயே உறைந்துபோய்விட்டார். இடையிடையே எப்போதாவது மட்டும் அவரது கண்ணாடிக்குள்ளாகத் தெரியும் கரும்புள்ளிக் கண்கள் உணர்ச்சியற்று அகல விரிந்து மூடின.

இந்த மாதிரியான உயிரற்ற வெறுப்புணர்ச்சியையும், உணர்ச்சியற்ற பற்றின்மையையும், கண்டு தனக்குள் தானே கேட்டுக்கொண்டாள்.

“இவர்களா தீர்ப்புக் கூறப் போகிறார்கள்?”

இந்தக் கேள்வி அவளது இதயத்தை குன்றிக் குறுகச் செய்தது: அவளது இதயத்திலிருந்த பயபீதியைப் பிதுக்கி வெளித்தள்ளி, வேதனை தரும் அவமான உணாச்சியைக் குடி புகுத்தியது.

அரசாங்க வக்கீலின் பேச்சு எதிர்பாராதவிதமாகத் திடீரென நின்றுவிட்டது. அவர் விருட்டென இரண்டடி முன்னால் வந்து நீதிபதிகளுக்கு வணக்கம் செலுத்தினார், தமது கைகளைத் தேய்த்துக் கொடுத்துக்கொண்டே உட்கார்ந்தார். பிரபுவம்சத் தலைவர் அவரைப் பார்த்துத் தலையை ஆட்டி, கண்களை உருட்டி விழித்தார். நகர மேயர் அவரோடு கை குலுக்குவதற்காகத் தம் கரத்தை நீட்டினார்: ஜில்லா அதிகாரி தமது தொந்தியையே பார்த்தார், லேசாகப் புன்னகை புரிந்துகொண்டார்.

ஆனால் நீதிபதிகளோ இந்தப் பேச்சினால் எந்தவிதத்திலும் மகிழ்வுற்றதாகத் தெரியவில்லை. அவர்கள் அசையாது உட்கார்ந்திருந்தார்கள்.