பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

33


அகன்ற நெற்றியும் கொண்ட அந்தப் பையனின் பெயர் பியோதர்; தொழிற்சாலையின் பழைய தொழிலாளியான சிஸோவ் என்பவனின் மருமகன். அடுத்தவன் கொஞ்சம் அடக்கமானவன். அவன் தன் தலைமயிரை வழித்துவாரிவிட்டிருந்தான். அவளுக்கு அந்தப் பையனைத் தெரியாது. எனினும் அவனைப் பார்த்ததும், அவளுக்கு எந்த பயமும் தோன்றவில்லை. கடைசியாக பாவெல் வந்து சேர்ந்தான், அவனோடு, தாய்க்கு இனம் தெரிந்த வேறு இரு தொழிலாள இளைஞர்களும் வந்து சேர்ந்தனர்.

“நீ தேநீருக்குத் தண்ணீர் வைத்துவிட்டாயா?” என்று அன்போடு கேட்டான் பாவெல், “மிக நன்றி!”

“நான் போய்க் கொஞ்சம் ஓட்கா வாங்கி வரட்டுமா?” என்று கேட்டாள் அவள். காரணம் தெரியாத ஏதோ ஒன்றுக்கு தான் எப்படி நன்றி செலுத்துவது என்பது தெரியாமல்தான் இப்படிக் கேட்டாள் அவள்.

“இல்லை, தேவையில்லை’ என்று அன்பு ததும்பும் புன்னகையோடு சொன்னான் பாவெல்.

அவளைக் கேலி செய்வதற்காகவே, தன் மகன் இந்தக் கோஷ்டியைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாய்க் கூறிப் பயங்காட்டி விட்டதாக அவள் திடீரென நினைத்தாள்.

“அது சரி, இவர்கள்... இவர்கள் தானா: அந்த சட்டவிரோதமான நபர்கள்?’ என்று மெதுவாகக் கேட்டாள் அவள்.

“இவர்களேதான்!” என்று பதில் கூறிவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்தான் பாவெல்.

“ஐயே!... “ என்று அன்பு கலந்த வியப்புடன் சொன்னாள் அவள். பிறகு தனக்குள்ளே இளக்காரமாக நினைத்துக்கொண்டாள்: “இன்னும் இவன் குழந்தைதான்!”

6

தேநீர் தயாராகி விட்டது. அதை எடுத்துக்கொண்டு தாய் அந்த அறைக்குள் நுழைந்தாள், விருந்தாளிகள் அனைவரும் மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருந்தார்கள். நதாஷா ஒரு மூலையில் விளக்கடியில் ஒரு புத்தகத்துடன் உட்கார்ந்திருந்தாள்.

“மனிதர்கள் ஏன் இப்படி மோசமாக வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்...” என்று ஆரம்பித்தாள்.

“ஏன், அவர்களே மோசமானவர்களாக இருக்கிறார்கள்...” என்று குறுக்கிட்டான் அந்த ஹஹோல்.