பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

486

மக்சீம் கார்க்கி


உள்ளத்தின்மீதும் சுமத்தியிருக்கும் சகலவிதமான அடிமைத்தனத்தையும், சுயநலத்தின் பேராசையால் மனிதர்களை நசுக்கிப் பிழியும் சகலவிதமான சாதனங்களையும் நாங்கள் எதிர்த்துப் போராட விரும்புகிறோம், எதிர்த்துப் போராடவே செய்வோம். நாங்கள் தொழிலாளர்கள், சிறு குழந்தைகளின் விளையாட்டுக் கருவிகளிலிருந்து பிரம்மாண்டமான யந்திர சாதனங்கள்வரை சகலவற்றையும் எங்கள் உழைப்பின் மூலமே நாங்கள் உலகத்துக்குப் படைத்துக் கொடுக்கிறோம். ஆனால், எங்களது மனித கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் உரிமையைக்கூடப் பறிகொடுத்தவர்களும் நாங்கள்தான். சொந்த நலன்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஒவ்வொருவரும் எங்களைத் தங்கள் கைக்கருவிகளாகப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. ஆனால் தற்போது நாங்கள் எங்கள் கைகளிலேயே சகல அதிகாரமும் இருக்க வேண்டும் என்பதற்காக, இறுதியாய் அந்த அதிகாரத்தை அடையும் அளவுக்கு சுதந்திரம் பெற விரும்புகிறோம். எங்களது கோஷங்கள் மிகவும் தெளிவானவை: ‘தனிச் சொத்துரிமை ஒழிக!’ ‘உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் மக்கள் கையில்!’ ‘அதிகாரம் அனைத்தும் மக்களிடம்’ ‘உழைப்பது ஒவ்வொருவருக்கும் கடமை!’ இவைதான் எங்கள் கோஷங்கள். இவற்றிலிருந்து நாங்கள் வெறும் கலகக்காரர்கள் அல்ல என்பதை நீங்கள் கண்டுகொள்ளலாம்!”

பாவெல் லேசாகச் சிரித்தான். தனது தலைமயிரை விரல்களால் மெதுவாகக் கோதிவிட்டுக்கொண்டான். அவனது நீலக்கண்களின் ஒளி முன்னைவிட அதிகமாகப் பிரகாசித்தது.

“விஷயத்தைவிட்டுப் புறம்பாகப் பேசாதே!” என்று அந்தக் கிழட்டு நீதிபதி தெளிவாகவும் உரத்தும் எச்சரித்தார், அவர் பாவெலின் பக்கமாகத் திரும்பி அவனைப் பார்த்தார். அவர் பார்த்த பார்வையில் அவரது மங்கிய இடது கண்ணில் பொறாமையும் புகைச்சலும் நிறைந்த ஒரு ஒளி பளிச்சிட்டு மின்னுவதாகத் தாய்க்குத் தோன்றியது, எல்லா நீதிபதிகளும் அவளது முகனை ஏறிட்டுப் பார்த்தார்கள். எல்லோரது கண்களும் அவனது முகத்தையே பற்றிப்பிடித்து, அவனது சக்தியை உறிஞ்சுவது போலவும், அவனது ரத்தத்துக்காக தாகம் கொண்டு தவிப்பது போலவும், அந்த ரத்த பானத்தால் உளுத்துக் கலகலத்துப்போன தங்கள் உடம்புகளுக்கு ஊட்டமளித்துத் தேற்றிக்கொள்ள நினைப்பது போலவும், தாய்க்குத் தோன்றியது. ஆனால் அவளது மகனோ உறுதியோடும் தைரியத்தோடும் நேராக நிமிர்ந்து நின்று தனது கையை எட்டி நீட்டிப் பேசிக்கொண்டிருந்தான்:

“நாங்கள் அனைவரும் புரட்சிக்காரர்கள். ஒரு சிலர் வேலை வாங்கவும் மற்றவர்கள் அனைவரும் வேலை செய்யவுமாக இருக்கின்ற