பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

488

மக்சீம் கார்க்கி


கூறிய சகலவாதப் பிரதிவாதங்களும் வாய் சோர்ந்து வலுவிழந்து வாடி விழுந்ததை இப்போது நீங்கள் கண்டீர்கள். எந்தவிதமான புதிய சிந்தனைகளையும் உங்களால் படைக்க இயலாது. ஆத்மார்த்த விஷயத்தில் நீங்கள் ஆண்மையற்று மலடுதட்டிப் போய்விட்டீர்கள், ஆனால் எங்கள் கருத்துக்களோ என்றென்றும் வளர்ந்தோங்குகின்றன. என்றென்றும் அணையாத தூண்டா மணிவிளக்காய் பிரகாசமுற்றோங்குகின்றன: மக்கள் அனைவருக்கும் உணர்ச்சி ஊட்டி, சுதந்திரப் போராட்டத்துக்காக அவர்களை ஒன்றுபடுத்தி பலம் பெற்று விளங்கச் செய்கின்றன. தொழிலாளர் வர்க்கம் சாதிக்கவேண்டிய மகத்தான சாதனையின் ஞானபோதம், உலகத் தொழிலாளர்கள் அனைவரையும் ஒன்றுபட உருக்கி வார்த்து அவர்களை ஒரு மகத்தான ஏக சக்தியாக உருவாக்குகிறது. அவர்களைக் கலகலத்து உயிர்ப்பிக்கும் பெரும் சக்தியை எதிர்த்துப் போராடுவதற்கு கொடுமையையும் வெடுவெடுப்பையும் தவிர உங்களிடம் எந்தவித ஆயுதமும் கிடையவே கிடையாது. ஆனால் உங்களது வக்கிர குணமோ வெளிப்படையானது. கொடுமையோ எரிச்சல் தருவது. இன்று எங்களது கழுத்தை நெரிக்கும் கைகளே நாளைக்கு எங்களைத் தோழமையுணர்ச்சியோடு தழுவிக்கொள்வதற்காகத் தாவி வரத்தான் போகின்றன. உங்களது சக்தியே செல்வத்தைப் பெருக்க உதவும் யந்திர சக்தி. அந்த சக்தி உங்களைத் துண்டுபடுத்தி, இரு கூறாக்கி, நீங்களே உங்களில் ஒருவரையொருவர் கொத்திக் குதறிக் குலைபிடுங்கிச் சாவதற்குத்தான் வழி கோலிக்கொடுக்கும், ஆனால் எங்களது சக்தியோ சகல தொழிலாள் மக்களின் ஒன்றுபட்ட ஐக்கிய பலத்தால் என்றென்றும் ஜீவ வேகத்தோடு வளர்ந்தோங்கிக்கொண்டிருக்கும் மனச்சாட்சியினால் இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் செய்வது அனைத்தும் படுமோசமான பாதகச் செயல்கள்; ஏனெனில் உங்கள் செயல்கள் அனைத்தும் மக்களை அடிமைப்படுத்துவதில்தான் முனைந்து நிற்கின்றன. உங்களது பொய்மையும், பேராசையும், குரோத வெறியும் உலகத்தில் எண்ணற்ற பிசாசுகளையும் பூதங்களையும்தான் படைத்திருக்கின்றன; அந்தப் பூதங்களும் பிசாசுகளும் மக்களை கோழையராக்கிவிட்டன; அந்தப் பைசாச ஆதிக்கப் பிடிப்பிலிருந்து மக்களை விடுவித்துக் காப்பாற்றுவதே எங்கள் பணி. நீங்கள் மனிதனை வாழ்க்கையினின்றும் பிய்த்துப் பிடுங்கி, அவனை அழித்துவிட்டீர்கள். நீங்கள் அழித்துச் சுடுகாடாக்கிய இந்த உலகத்தை, சோஷலிசம் ஒரு மகோன்னதமான மாசக்தியாக வளர்ந்து உருவாகி வளம்படுத்தும். நிச்சயம் இது நிறைவேறத்தான் போகிறது!”.

பாவெல் ஒரு கணம் பேச்சை நிறுத்தினான். மீண்டும் அதே உறுதியோடு மெதுவாகக் கூறினான்: