பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

494

மக்சீம் கார்க்கி


பார்த்தார்கள். நீதிபதிகள் முன்னும் பின்னும் அசைந்தாடினார்கள். அந்தக் கிழட்டு நீதிபதி வாய்விட்டுக் கத்தினார்:

“அடுத்தது— இவான் கூஸெவ்!”

“நான் சொல்வதற்கு எதுவும் இல்லை!”

“அடுத்தது—வசீலி கூஸெவ்!”

“எனக்கும் ஒன்றும் இல்லை ”

“பியோதர் புகின்!”

வெளுத்து நிறமிழந்து போயிருந்த புகின் சிரமத்தோடு எழுந்திருந்து, தன் தலையை உலுக்கிவிட்டுக்கொண்டு பேசினான்.

“நீங்கள் உங்களைப் பார்த்தே நாணித் தலைகுனிய வேண்டும். எனக்குக் கல்வியறிவு இல்லைதான். என்றாலும் எது நியாயம் என்பது எனக்குத் தெரியும்.” அவன் தன் கையைத் தலைக்கு மேலாக உயர்த்தி, மௌனமானான்; கண்களைப் பாதி மூடியவாறு தூரந்தொலையிலுள்ள எதையோ கூர்ந்து கவனிப்பதுபோலப் பார்த்தான்.

“இதென்ன இது?” என்று எரிச்சல் கலந்த வியப்போடு கூறிக்கொண்டே அந்தக் கிழ நீதிபதி நாற்காலியில் சாய்ந்தார்.

“ப்பூ! நீங்கள் நாசமாய்ப்போக!...”

புகின் வெறுப்போடு கீழே உட்கார்ந்தான். அவனது இருண்ட வார்த்தைகளில் ஏதோ ஒரு புதுமையும் ஏதோ ஒரு பெரிய முக்கியத்துவமும், எதையோ பழித்துக் கூறும் துக்க உணர்ச்சியும், அப்பாவித்தனமும் பொதிந்திருந்தன. எல்லோருமே இதை உணர்ந்துகொண்டார்கள். நீதிபதிகள் கூட, அவன் கூறியதைவிடத் தெளிவானதான ஓர் எதிரொலியை எதிர்பார்ப்பதுபோலத் தம் செவிகளைக் கூர்ந்து சாய்த்தார்கள். அசைவற்ற அமைதி அங்கு நிலவியது. இடையிடையே அழுகைக்குரல் கேட்பதைத் தவிர அந்த மௌனத்துக்கு வேறு இடைஞ்சல் எதுவும் ஏற்படவே இல்லை. கடைசியாக, அரசாங்க வக்கீல் தமது தோள்களைக் குலுக்கிக்கொண்டு லேசாகச் சிரித்தார்; பிரபுவம்சத் தலைவர் இருமினார்; மீண்டும் அந்த நீதிமன்றத்தில் ரகசியப் பேச்சுக்களின் கசமுசப்புக்குரல் முணுமுணுக்கத் தொடங்கியது.

“நீதிபதிகள் பேசப்போகிறார்களா?” என சிஸோவைப் பார்த்து மெதுவாகக் கேட்டாள் தாய்.

“எல்லாம் முடிந்துவிட்டது— இனிமேல் தீர்ப்பு மட்டும்தான் பாக்கி.....”