பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

496

மக்சீம் கார்க்கி


எதிராகக் கிளம்புகிறார்கள்? நான் அதைத் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கும் என் இதயத்தில் சில சொந்த அபிப்பிராயங்கள் உண்டு........”

“உஷ்!” என்று சமோய்லவின் தந்தையை நோக்கி விரலை நீட்டி எச்சரிக்கை செய்தான் அதிகாரி.

சிஸோவ் வருத்தத்தோடு தலையை அசைத்துக்கொண்டான்.

தாய் தனது பார்வையை அந்த நீதிபதிகளின் மீதிருந்து அகற்றவே இல்லை. அவர்கள் வெளிக்குத் தெரியாமல் தமக்குள் பேசிக்கொள்ளும்போது அவர்கள் ஆத்திர உணர்ச்சி அதிகரித்து வருவதையே அவள் கவனித்துக்கொண்டிருந்தாள். அவர்களது உணர்ச்சியற்ற மெலிந்த குரல்கள் தாயின் முகத்தைத் தொட்டன. அவளது கன்னங்களைத் துடிக்கச் செய்தன. அவளது வாயிலே ஏதோ ஓர் அருவருக்கத்தக்க கசப்பு ருசியை உண்டாக்கின. குதுகுதுக்கும் ரத்தமும், ஜீவ சக்தியும் நிறைந்து துடிக்கும் தனது மகனையும் அவனது தோழர்களையும் பற்றி, அவர்களிடம் உடம்புகளைப்பற்றி, அந்த இளைஞர்களின் தசைகளையும் அவயவங்களையும் பற்றியே அவர்கள் பேசிக்கொண்டிருப்பதாக தாய்க்குத் தோன்றியது. அந்த உடம்புகளைக் காணும் அவர்களது உள்ளத்தில் பிச்சைக்காரர்களின் கேவலமான பகைமை உணர்ச்சியும் நோய்ப்பட்டு நொம்பலமானவர்களின் பேராசையுணர்ச்சியுமே இடம்பெற்று வளர்ந்தன. இன்பத்தை அறியவும் ஆக்கவும் சக்தி படைத்த, வேலை செய்யவும் செல்வத்தை ஆக்கவும் பெருக்கவும் சக்தி படைத்த அந்த இளைஞர்களது உடல்களைப் பார்த்துப் பார்த்து வருத்தத்தோடு தங்கள் நாக்குகளைச் சப்புக்கொட்டிக்கொண்டார்கள். ஆனால் இந்த உடல் வளம்பெற்ற இளைஞர்களோ இனி ஒதுக்கப்பட்டுப் போனார்கள். அதாவது இனிமேல் அந்த உடல் வளத்தை யாரும் தங்கள் உடமையாகக் கருத முடியாது. அதைச் சுரண்டி வாழ முடியாது; தின்று வாழ முடியாது. இந்தக் காரணத்தினால்தான் அந்தக் கிழட்டு நீதிபதிகளின் மனத்திலே பழிவாங்கும் சோக எரிச்சல் மூண்டது. தம் முன்னால் புதிய இரைப்பிராணி வரும்போது அதை எட்டிப்பிடிக்கத் தெம்பும் திராணியும் அற்றுப்போய் மெலிந்து வாடும் காட்டுமிருகத்தைப்போல், பிற மிருகங்களின் பலத்தை அமுங்கடித்து அவற்றைத் தமக்கு இரையாக்கித் தின்பதற்குச் சக்தியற்றுப்போய் அந்த இரைப்பிராணிகள் தம்மிடமிருந்து தப்பி நடமாடுவதைக்கண்டு, அவற்றைப் பிடித்து அடிக்கத் திராணியற்று அவற்றை நோக்கி உறுமுவதோடும் ஊளையிடுவதோடும் திருப்தியடையும் காட்டுமிருகத்தைப்போல், அவர்களும் தங்களது ஆட்சிக்குள் சிக்காது தப்பிக்கும் அந்த இளைஞர்களைப் பார்த்து பழிகொள்ளும் துன்ப உணர்வுடன் கொட்டாவி விட்டுக் குமுறிக் கொண்டிருந்தார்கள்.