பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

501


“தேசாந்திர சிட்சை!” என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் சொன்னான் சிஸோவ். “நல்லதாய்ப் போயிற்று. கடவுள் புண்ணியத்தில் இது ஒரு வழியாய் முடிந்தது. தேசாந்திரத்தில் கடும் உழைப்பு என்றார்கள். அது எப்படியும் ஒத்துப்போய்விடும். அம்மா, வீணாகக் கவலைப்படாதே.”

“அது எப்படியிருக்கும் என்பது எனக்குத் தெரியும்” என்று சோர்ந்த குரலில் சொன்னாள் தாய்.

“எப்படியும் போகட்டும். நமக்குத்தான் என்னென்ன நடக்கும் என்பது தெரியுமே. அது எப்படியிருக்கும் என்பதைப்பற்றிப் பேசுவானேன்?”

அவன் கைதிகளின் பக்கமாகத் திரும்பினான்; அதற்குள் காவலாளிகள் கைதிகளைக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள்.

“போய் வா, பியோதர்!” என்று அவன் கத்தினான். “எல்லோரும் போய் வாருங்கள், கடவுள் உங்களுக்குக் கருணை புரியட்டும்!”

தாய் தன் மகனையும் மற்றவர்களையும் பார்த்து மெளனமாகத் தலையை ஆட்டினாள். அவள் வாய்விட்டு அழ விரும்பினாள்; ஆனால் அழுவதற்கோ வெட்கப்பட்டாள்.

27

நீதி மன்றத்தைவிட்டு அவள் வெளியே வந்தாள். அதற்குள் பொழுது இருண்டு போய்விட்டதைக் கண்டு அவள் அதிசயப்பட்டாள். தெரு மூலைகளில் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. வானத்தில் நட்சத்திரங்கள் மின்னிச் சுடர்விட்டுக்கொண்டிருந்தன. நீதி மன்றத்துக்கு வெளியே கும்பல் கும்பலாக ஜனங்கள் கூடி நின்றார்கள். அந்தக் குளிர்ந்த காற்றில் வெண்பனி சரசரத்தது. இளமை நிறைந்த குரல்கள் ஒலித்தன. சாம்பல் நிற நிலையங்கி தரித்த ஒரு மனிதன் சிஸோவின் முகத்தைக் கூர்ந்து பார்த்துவிட்டு அவசர அவசரமாகக் கேட்டான்:

“என்ன தண்டனை?”

“தேசாந்திர சிட்சை”

“எல்லோருக்குமா?”

“ஆம்.”

அந்த மனிதன் போய்விட்டான்.

“பார்த்தாயா?” என்றான் சிஸோவ். “அவர்களுக்கும் இதில் ஆர்வம்.”