பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

மக்சீம் கார்க்கி


வெட்டிவிடப்பட்ட கிராப். அவன் தன் தலையைக் கையினால் தடவிக் கொடுத்துக்கொண்டு தரையையே பார்த்துக்கொண்டிருந்தான். எனவே அவனது முகம் சரியாகத் தெரியவில்லை. அந்த அறையில் ஏதோ ஒரு புதிய மங்களகரமான சூழ்நிலை குடிபுகுந்த மாதிரி இருந்தது. தாயின் உள்ளத்தில் இதுவரை தோன்றாத ஏதோ ஒரு அசாதாரா உணர்ச்சி மேலோங்கியது. நதாஷாவின் இனிய குரலின் பின்னணி இசையிலே, அவள் தனது குமரிப் பருவத்துக் கும்மாளங்களை, ஆபாச சல்லாபப் பேச்சுக்களை, வாயில் எப்போதும் ஒட்கா நாற்றம் அடித்துக் கொண்டிருக்கும் வாலிபப் பிள்ளைகளின் வம்புத்தனமான கேலிப் பேச்சுக்களையெல்லாம் சிந்தித்துப் பார்த்தாள். அந்த நினைவுகளால் அவளது இதயம் தனக்குத்தானே அனுதாபப்பட்டுக்கொண்டது.

தன் கணவனுக்குத் தான் எப்படி மனைவியானாள் என்ற விஷயத்தையும் அவள் சிந்தித்துப் பார்த்தாள். அந்தக் காலத்தில், இப்படிப்பட்ட கேளிக்கை விருந்தின்போது, ஒருநாள் இரவில். அவளை ஒரு இருளடைந்த வாசற்புறத்தில் அவன் வழிமறித்துப் பிடித்தான்; அவளது உடம்பைச் சுவரோடு சாய்த்து அழுத்தினான்.

“என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா!” என்று முரட்டுத்தனமாகக் கேட்டான். அப்போது அவளது மனம் புண்பட்டு நொந்தது. எனினும் அவன் அவளது மார்பகத்தை வேதனை தரும் விதமாகப் பற்றிப் பிடித்துக்கொண்டு. ஆவி கலந்து வீசும் அவனது உஷ்ண சுவாசத்தை அவளது முகத்தின்மீது பிரயோகித்தான். அவனது பிடியிலிருந்து தப்புவதற்காக அவள் முரண்டு திமிறி ஒரு பக்கமாக ஒடப் பார்த்தாள்.

“எங்கே போகணும்!” என்று இரைந்தான் அவன். “பதில்– சொல்லு உன்னைத்தான்!”


அவள் எதுவுமே சொல்லவில்லை. தான் அடைந்த துன்பத்தாலும் அவமானத்தாலும் அவளது மூச்சே திணறிப் போய்விட்டது.

யாரோ கதவைத் திறந்து கொண்டு வாசல் பக்கமாக வந்தார்கள்: மெதுவாக அவன் தன் உடும்புப்பிடியை நெகிழவிட்டான்.

“ஞாயிற்றுக்கிழமையன்று கல்யாணப் பேச்சுக்கு அம்மாவை அனுப்பி வைப்பேன், ஆமாம்!” என்றான் அவன்.

அவன் சொன்னபடியே செய்துவிட்டான்.

தாய் தன் கண்களை மூடி நெடுமூச்செறிந்தாள்.

“மக்கள்: எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நான் அறியவிரும்பவில்லை. மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையே அறியவிரும்புகிறேன்” என்று எதிர்வாதம் பேசும் குரலில் சொன்னான் நிகலாய்.