பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

515


"நீங்கள் சொல்வது உங்களைப்பற்றியில்லையே!”

தாய் படுக்கையைவிட்டு எழுந்து உடை உடுத்திக் கொள்ளத் தொடங்கினாள்.

“தன்னை எப்படிப் பிறரிடமிருந்து பிரித்துப் பார்க்க முடியும்? ஒருவனை நேசிக்கிறாய். அவனோ விலை மதிப்பற்றவன். அனைவரின் நலத்திற்காகவும் பயப்படுகிறான். ஒவ்வொருவருக்காகவும் அனுதாபப்படுகிறான். இவையெல்லாம் உன் இதயத்தில் மோதுகின்றன....... ஒரு புறமாய் எப்படி ஒதுங்கி நிற்க முடியும்?”

அவள் அந்த அறையின் மத்தியிலே ஒரு கணம் நின்றாள். பாதி உடுத்தியவாறே சிந்தனையில் ஆழ்ந்து நின்றுபோய்விட்டாள். ஒரு காலத்தில் தன் மகனது உடம்பை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என்ற சிந்தனையிலேயே மூழ்கிப்போய் என்றென்றும் தன் மகனைப் பற்றிய கவலையிலும் பயத்திலும் அலைக்கழிந்த அந்தப் பழைய பெண் பிறவியாக, அவள் இப்போது இல்லை என்பது அவளுக்குத் தோன்றியது. அவள் எங்கோ தூரத் தொலைவில் போய்விட்டாள், அல்லது அவளது உணர்ச்சி நெருப்பில் அவள் சாம்பலாகிப் போயிருப்பாள். இந்த மாதிரி எண்ணிட தாயின் மனத்திலே ஒரு புதிய ஆவேசமும் பலமும் தோன்றின. அவள் தன் இதயத்தைத் துருவிப் பார்த்தாள்; அதன் துடிப்பைக் கேட்டாள், பழைய பயவுணர்ச்சிகள் மீண்டும் வந்துவிடக் கூடாதே என்று பயந்தாள்.

“என்ன யோசனை செய்கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே லுத்மீலா அவள் பக்கம் வந்தாள்.

“தெரியாது” என்றாள் தாய்.

இருவரும் மௌனமாக ஒருவரையொருவர் பார்த்தார்கள்: புன்னகை புரிந்தார்கள். பிறகு லுத்மீலா அந்த அறையைவிட்டு வெளிச் சென்றவாறே சொன்னாள்.

“அங்கே என் தேநீர்ப் பாத்திரம் என்ன கதியில் இருக்கிறதோ?”

தாய் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். வெளியில் வெயிலும் குளிரும் பரவியிருந்தது. அவளது இதயமோ வெதுவெதுப்போடும் பிரகாசத்தோடும் இருந்தது. அவள் சகலவற்றைப் பற்றியும் சாங்கோபாங்கமாக மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருக்க விரும்பினாள். சந்தியா கால சூரிய ஜோதியைப் போல் இனிமையாகப் பிரகாசித்துக்கொண்டிருக்க எண்ணங்களைத் தன் இதயத்திலே புகுத்திவிட்ட யாரோ ஓர் இனம் தெரியாத நபருக்கு நன்றி காட்டிப் பேசவேண்டும் என்ற மங்கிய உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. இத்தனை நாட்களாக பிரார்த்தனை செய்வதையே கைவிட்டுவிட்ட அவளுக்கு அன்று பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற ஆசையெழுந்தது.