பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

516

மக்சீம் கார்க்கி


அவளது மனக்கண்ணில் ஒரு வாலிப முகம் பளிச்சிட்டுத் தோன்றியது. அந்த முகம் அவளை நோக்கித் தெள்ளத் தெளிவான குரலில், “இவள்தான் பாவெல் விலாசவின் தாய்!” என்று கூறியது. அவள் கண் முன்னால் மகிழ்ச்சியும் அன்பும் துள்ளாடும் சாஷாவின் நயனங்கள்; ரீபினின் கரியதோற்றம், உறுதிவாய்ந்த உலோகம் போன்ற தன் மகனின் முகம். நிகலாயின் கூச்சத்துடன் கண்சிமிட்டும் பார்வை, முதலியன எல்லாம் தோன்றின. இந்த மனத்தோற்றங்கள் எல்லாம் திடீரென ஒர் ஆழ்ந்த பெருமூச்சாக ஒன்றுகலந்து உருவெடுத்து, வானவில்லின் வர்ணம் தோய்ந்த மேகப்படலத்தைப் போன்ற ஒளி சிதறி அவளது கன்னங்களைக் கவிழ்த்து சூழ்ந்து அவள் மனத்தில் ஒரு சாந்தியுணர்ச்சியை உருவாக்கின.

“நிகலாய் சொன்னது சரிதான்” என்று சொல்லிக்கொண்டே அந்த அறைக்குள் லுத்மீலா மீண்டும் வந்தாள்; “அவர்கள் அவனைக் கைது செய்துவிட்டார்கள். நீங்கள் சொன்ன மாதிரி நான் அந்தப் பையனை அனுப்பித் தெரிந்து வரச்சொன்னேன். வீட்டுக்கு வெளியே போலீஸ்காரர்கள் இருந்ததாகவும், வெளிக்கதவுக்குப் பின்னால் ஒரு போலீஸ்காரன் ஒளிந்து கொண்டிருந்ததாகவும் அவன் சொன்னான். சுற்றிச் சூழ உளவாளிகள் இருக்கிறார்களாம். அந்தப் பையனுக்கு அவர்களையெல்லாம் தெரியும்.”

“ஆ!” என்று தலையை அசைத்துக்கொண்டே சொன்னாள் தாய்; “பாவம், அப்பாவி...”

அவள் பெரு மூச்சுவிட்டாள், அதில் துக்க உணர்ச்சியில்லை, இதைக்கண்டு அவள் தன்னைத்தானே வியந்து கொண்டாள்.

“சமீப காலமாக அவன் இந்த நகரத்திலுள்ள தொழிலாளர்களுக்கு எவ்வளவோ வகுப்புக்கள் நடத்தி வந்தான். பொதுவாக, இது அவன் அகப்பட்டுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம்தான்” என்று அமைதியாக, ஆனால் முகத்தைச் சுழித்துக்கொண்டே சொன்னாள் லுத்மீலா, “அவனது தோழர்கள் அவனைத் தலைமறைவாகப் போகச் சொன்னார்கள், ஆனால் அவன் கேட்கவில்லை. இந்த மாதிரிக் சந்தர்ப்பங்களில் இவனைப் போன்ற ஆசாமிகளைப் ‘போ, போ’ என்று போதித்துக் கொண்டிருக்கக்கூடாது; நிர்ப்பந்த வசமாகத்தான் போகச் செய்யவேண்டும்.”

இந்தச் சமயத்தில் சிவந்த கன்னங்களும் கரிய தலைமயிரும், முன்வளைந்த மூக்கும். அழகிய நீலக் கண்களும் கொண்ட ஒரு சிறுவன் வாசல் நடையில் வந்து நின்றான்.

“நான் தேநீர் கொண்டு வரட்டுமா?” என்று கேட்டான் அவன்.

“கொண்டுவா, செர்கேய்” என்று கூறிவிட்டுத் தாயின் பக்கமாகத் திரும்பினாள் லுத்மீலா. “இவன் என் வளர்ப்புப் பையன்” என்றாள்.