பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

517


அன்றைய தினத்தில் லுத்மீலா வழக்கத்துக்கு மாறாக சுமூகபாவத்தோடும் எளிமையோடும் பழகுவதாகவும் தாய்க்குத் தோன்றியது. அவளது உடலின் லாவகம் நிறைந்த அசைவுகளிலே ஒரு தனி அழகும் உறுதியும் நிறைந்திருந்தன. இத்தன்மை அவளது வெளுத்த முகத்தின் நிர்த்தாட்சண்ய பாவத்தை ஓரளவு சமனப்படுத்தியது. இரவில் கண் விழித்ததால் அவளது கண்களைச் சுற்றிக் கருவளையங்கள் விழுந்திருந்தன. என்றாலும் அவளது இதய வீணையில் ஏதோ ஒரு தந்தி முறுக்கேறி விறைத்து நிற்பது போன்ற தன்மையை எவரும் கண்டு கொள்ள முடியும்.

அந்தப் பையன் தேநீர்ப் பாத்திரத்தைக் கொண்டு வந்தான்.

“செர்கேய். உனக்கு இவளை நான் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். இவள்தான் பெலகேயா நீலவ்னா, நேற்று விசாரணை நடந்ததே. அந்தத் தொழிலாளியின் தாய்.”

செர்கேய் ஒன்றும் பேசாமல் தலைவணங்கினான். தாயின் கையைப் பிடித்துக் குலுக்கினான். அறையை விட்டு வெளியே போனான். ஒரு ரொட்டியை எடுத்துக்கொண்டுவந்து, மீண்டும் தன் இடத்தில் அமர்ந்துக்கொண்டான். லுத்மீலா நேநீரைக் கோப்பையில் ஊற்றியவாறே, தாயை வீட்டுக்குப் போக வேண்டாம் என்றும், அந்தப் போலீசார் யாருக்காகக் காத்துக் கிடக்கிறார்கள் என்பது தெளிவாகிற வரையில், அவள் அந்தப் பக்கமே செல்லாமலிருப்பதே நல்லதென்றும் எடுத்துக்கூறினாள்.

“ஒரு வேளை அவர்கள் உங்களையே எதிர்பார்த்துக் கிடக்கலாம், பிடித்துக் கொண்டுபோய் ஏதாவது கேள்விகளைக் கேட்டுத் தொலைப்பார்கள்.”

“இருக்கட்டுமே” என்று பதில் சொன்னாள் தாய். “அவர்கள் விரும்பினால் என்னையும்தான் கைது செய்துகொண்டு போகட்டுமே. அதனால் என்ன பெரிய குடி முழுகிவிடப் போகிறது? ஆனால் பாவெலின் பேச்சை மட்டும் நாம் முதலில் விநியோகித்து விட்டோமானால்!”

“நான் அச்சுக் கோத்து முடித்துவிட்டேன். நாளைக்கு நகரிலும் தொழிலாளர் குடியிருப்பிலும் விநியோகிப்பதற்குத் தேவையான பிரதிகள் தயாராகிவிடும். உங்களுக்கு நதாஷாவைத் தெரியுமா?”

“நன்றாய்த் தெரியும்.”

“அவற்றை அவளிடம் கொண்டு சேருங்கள்.”

அந்தப் பையன் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தான், அவர்கள் பேசியது எதையுமே அவன் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை.