பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

521


"எனக்கும் ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கு இப்போது பதின்மூன்று வயதாகிவிட்டது, ஆனால், அவன் தன் தந்தையோடு வாழ்கிறான். என் கணவர் ஓர் அரசாங்க வக்கீலின் நண்பர். அந்தப் பையன் அவரோடு இருக்கிறான். அவன் எப்படி மாறப் போகிறனோ? அதைப்பற்றி நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு.....”

அவளது குரல் அடைபட்டு நின்றது. ஒரு நிமிஷம் கழித்து அவள் மீண்டும் அமைதியாக, சிந்தனையோடு பேசத் தொடங்கினாள்.

“நான் எந்த ஜனங்களை நேசிக்கிறேனோ, இந்த உலகத்தில் எந்த ஜனங்களை அருமையான மக்கள் என்று. மதிக்கிறேனோ அந்த ஜனங்களுக்குப் பரம எதிரியானவரிடம் தான் அவன் வளர்ந்து வருகிறான். என் மகனே எனக்கு எதிரியாக வளர்ந்து வரக்கூடும்: அவனால் என்னுடன் வாழ முடியாது. நான் இங்கு மாறு பெயரில் வாழ்ந்து வருகிறேன். அவனை நான் பார்த்தே எட்டு வருஷங்கள் ஆகின்றன. எட்டு வருஷங்கள்! எவ்வளவு காலம்!”

அவள் ஜன்னலருகே நின்றாள். நிர்மலமாக வெளுத்துக்கிடந்த வானத்தைப் பார்த்தாள்.

அவன் மட்டும் என்னோடு வாழ்ந்திருந்தால், நான் இன்னும் பலம் பெற்றிருப்பேன். எனது இதயத்தில் இந்த வேதனை இன்னும் உறுத்திக்கொண்டிருக்காது..... அவன் இறந்து போயிருந்தால்கூட. எனக்குச் சிரமமில்லாது போயிருக்கும்......”

“அடி. என் கண்ணே !” என்று பாசத்தால் புண்பட்ட இதயத்தோடு பெருமூச்செறிந்தாள் தாய்.

“நீங்கள் அதிருஷ்டக்காரர்!” என்று ஒரு கரத்த புன்னகையோடு சொன்னாள் லுத்மீலா. “அதிசயமான ஒற்றுமை —தாயும் மகனும் ஒரே அணியில் ஒருவர் பக்கம் ஒருவர்—- அபூர்வமான நிகழ்ச்சி!”

“ஆமாம். அதிசயமானதுதான்” என்று தன்னைத்தானே வியந்து கூறிக்கொண்டாள் பெலகேயா. பிறகு, தன் குரலைத் தாழ்த்தி ஏதோ ஓர் அந்தரங்க ரகசியத்தைக் கூறுவதுபோல அவள் பேசினாள், “நீங்கள் எல்லோரும்—-நிகலாய் இவானவிச்சும், சத்தியத்தைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் —-நீங்கள் எல்லோருமே ஒருவர் பக்கம் ஒருவராகத்தான் நிற்கிறீர்கள். திடீரென்று மக்கள் அனைவரும் நமக்கு உறவினர்களாகிவிடுகிறார்கள். உங்கள் அனைவரையும் நான் புரிந்துகொள்கிறேன். எனக்கு வார்த்தைகள்தான் புரியாது போகலாம்; ஆனால் அதைத் தவிரப் பிறவற்றையெல்லாம் என்னால் புரிந்து கொள்ளமுடியும்.”

“ஆமாம். அப்படித்தான்” என்று முனகினாள் லுத்மீலா. “அப்படித்தான்......"