பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

522

மக்சீம் கார்க்கி


தாய் தன் கையை லுத்மீலாவின் மார்பின் மீது வைத்துக்கொண்டே ரகசியக் குரலில் மேலும் பேசினாள்; ஒவ்வொரு வார்த்தையையும் நினைத்து நினைத்துப் பேசுவது போலிருந்தது அவள் பேச்சு.

“நமது பிள்ளைகள் உலகில் அணிவகுத்துச் செல்கிறார்கள். அதைத்தான் நான் புரிந்துகொள்கிறேன்—நமது பிள்ளைகள் உலகில் அணி வகுத்துச்செல்கிறார்கள்; உலகெங்கும், சகல மூலைமுடுக்குத் திசைகளிலிருந்தும் ஒரே ஒரு லட்சியத்தை நோக்கி அணிவகுத்து முன்னேறுகிறார்கள். பரிசுத்தமான உள்ளத்தோடும், அருமையான மனத்தோடும், தீமையை எதிர்த்து தமது பலத்த காலடியால் பொய்மையை மிதித்து நசுக்கிக்கொண்டே, கொஞ்சங்கூடத் தயக்கமின்றி முன்னேறிச் செல்கிறார்கள்.” அவர்கள் இளைஞர்கள். ஆரோக்கியசாலிகள்; அவர்களது சகல சக்தியையும் ஒரே ஒரு விஷயத்தை நோக்கி — நியாயத்தை எதிர்நோக்கிப் பிரயோகித்துச் செல்கிறார்கள். மனிதகுலத்தின் துயரத்தை வெல்வதற்காக அவர்கள் முன்னேறுகிறார்கள். சகல துரதிருஷ்டங்களையும் துடைத்துத் தூர்ப்பதற்காக சகல அசுத்தங்களையும் கழுவிப் போக்குவதற்காக அவர்கள் அணியணியாக முன்னேறிச் செல்கிறார்கள். அவற்றை அவர்கள் போக்கித்தான் தீருவார்கள். அவர்கள் ஒரு புதிய சூரியனை உலகுக்குக் கொண்டுவருவார்கள் என்று அவர்களில் ஒருவன் சொன்னான். நிச்சயம் அந்தச் சூரியனை அவர்கள் கொண்டு வந்தே தீருவார்கள்! மனமுடைந்துபோன சகல இதயங்களையும் ஒன்றுபடுத்துவார்கள்; ஒன்றுபடுத்தியே தீருவார்கள்!”

அவள் தான் மறந்துவிட்ட பிரார்த்தனை - வாசகங்களை எண்ணிப் பார்த்தாள். அந்த வார்த்தைகளால் அவளது மனத்திலே புதியதொரு நம்பிக்கை பிறந்தது. அந்த வாசகங்கள் அவளது இதயத்திலிருந்து தீப்பொறிகளைப் போல் சுடர்விட்டுத் தெறித்துப் பிறந்தன.

“நமது பிள்ளைகள் சத்தியமும் அறிவும் சமைத்த பாதையிலே செல்கிறார்கள். மனித இதயங்களுக்கு அன்பைக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். இவ்வுலகத்திலே புதியதொரு சொர்க்க பூமியை உண்டாக்குகிறார்கள். இவ்வுலகத்தைப் புதியதொரு ஒளி வெள்ளத்தால், ஆத்ம ஆவேசத்தின் அணையாத தீபத்தால், ஒளிரச் செய்கிறார்கள். அந்த ஒளிப்பிழம்பின் தீ நாக்குகளிலிருந்து புதிய வாழ்க்கை பிறப்பெடுத்துப் பொங்குகிறது. மனித சமுதாயத்தின் மீது நமது பிள்ளைகள் கொண்டுள்ள அன்பிலிருந்து அந்த வாழ்க்கை பிறப்பெடுக்கிறது. அந்த அன்பை எவரால் அணைக்க முடியும்? இதை எந்த சக்திதான் அழிக்க முடியும்? எந்த சக்திதான் இதை எதிர்க்க முடியும்? பூமியிலிருந்து இது ஊற்றெடுத்துப் பொங்கி வருகிறது: