பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

37



“அதுதான் சரி” என்று கூறிக்கொண்டே எழுந்தான் அந்தச் செம்பட்டைத் தலையன்.

“நீ சொல்வதை நான் ஒப்புக்கொள்ளவில்லை” என்று கத்தினான் பியோதர்.

வாக்குவாதம் பலத்தது. வார்த்தைகள் தீப் பிழம்புகள் போலச் சுழலத் தொடங்கின. அவர்கள் எதைப்பற்றி இப்படிச் சத்தம் போட்டுக் கொள்கிறார்கள் என்பது தாய்க்குத் தெரியவில்லை, எல்லோருடைய முகங்களும் உத்வேக உணர்ச்சியினால் ரத்தம் பாய்ந்து சிவந்து போயிருந்தன. எனினும் எவரும் நிதானம் இழக்கவில்லை. அவளுக்குக் கேட்டுப் பழக்கப்பட்டுப் போயிருந்த எந்த ஆபாச ஏச்சுப் பேச்சுக்களையும் அவர்கள் பிரயோகிக்கவில்லை.

“இந்தப் பெண்ணின் முன்னிலையில் அப்படிப் பேசுவதற்கு அவர்கள் வெட்கப்படுகிறார்கள்” என்று தீர்மானித்துக் கொண்டாள் தாய்.

நதாஷாவின் முகத்தில் தோன்றிய உக்கிரபாவத்தைக் காண்பது தாய்க்குப் பிடித்திருந்தது. நதாஷாவோ அவர்கள் அனைவரையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள், இவர்கள் அனைவருமே இன்னும் குழந்தைகள்தான் என்று கருதிப் பார்ப்பது போலிருந்தது அந்தப் பார்வை.

“ஒரு நிமிஷம் பொறுங்கள், தோழர்களே!” என்று அவள் திடீரென்று கத்தினாள். உடனே எல்லோரும் வாய் மூடி மெளனமாக அவளையே பார்த்தனர்.


“நாம் சகல விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை உங்களில் யார் ஒப்புக்கொள்கிறார்களோ, அவர்கள் சொல்வதே சரியானது. நம்மிடமுள்ள பகுத்தறிவின் ஒளியை நன்றாகத் தூண்டிவிட்டுக்கொள்ளவேண்டும். கீழ்ப்பட்டவர்கள் நம்மை நன்றாகப் பார்க்கட்டும். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் நம்மிடத்தில் நேர்மையான, உண்மையான தீர்ப்பும் தீர்மானமும் இருந்தேயாக வேண்டும். நாம் உண்மையை, பொய்யை முழுமையாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.


ஹஹோல் அவள் கூறியதைக் கேட்டு அவளது பேச்சுக்குத் தக்கபடி தலையை ஆட்டிக்கொண்டிருந்தான். நிகலாயும், செம்பட்டைத் தலையனும், பாவெலுடன் வந்த இன்னொரு பையனும் ஒரு தனிக் கோஷ்டியாகப் பிரிந்து நின்றார்கள், என்ன காரணத்தாலோ தாய்க்கு அந்தக் கோஷ்டியினரைப் பிடிக்கவில்லை.

நதாஷா பேசி முடித்த பிறகு, பாவெல் எழுந்து நின்றான்.