பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

524

மக்சீம் கார்க்கி



சித்தமும் பிரதிபலிக்கும்படி செய்துவிடவேண்டும் எனத் தாய் விரும்பினாள். அவள் லுத்மீலாவின் கைகளை எடுத்து அவற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டே பேசினாள்.


“அன்பானவளே, சகல மக்களுக்கும் ஒளியூட்டுவதற்கு ஒன்று இருக்கிறதென்பதை அந்த ஜோதியைச் சகல மக்களும் ஏறிட்டு நோக்கும் காலம் வரத்ததான் செய்யும் என்பதை, அந்த ஜோதியை அவர்கள் இதயபூர்வமாக வரவேற்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க எவ்வளவு நன்றாயிருக்கிறது!”


தாயின் அன்பு ததும்பும் அகன்ற முகத்தில் ஒரு நடுக்கம் குளிர்ந்தோடிப்பரந்தது. அவளது கண்கள் பிரகாசம் எய்தின. புருவங்கள் அந்தப் பிரகாசத்தை நிழலிடுவது போலத் துடிதுடித்தன. பெரிய பெரிய எண்ணங்களால் அவள் சிந்தை மயங்கிப் போயிருந்தாள்; அந்த எண்னாங்களுக்குள் தனது இதயத்துக்குள்ளே உள்ள சகல நினைவுகளையும், தான் வாழ்ந்த வாழ்வனைத்தையும் பெய்து வைத்தாள். அந்த எண்ணங்களின் சாரத்தை அவள் ஸ்படிக ஒளி வீசும் உறுதியான வார்த்தைகளாக வடித்தாள். அந்த வார்த்தைகள் அவளது இலையுதிர்கால இதயத்தில் பிரமாண்டமாகப் பெருகி வளர்ந்தது. அங்கு வசந்தகால சூரியனின் சிருஷ்டி சக்தியைக் குடியேற்றி, ஒளி ஊட்டின: என்றென்றும் வளர்ந்தோங்கும் பிரகாசத்தோடு அவை அவள் இதயத்தில் நின்று நிலைத்து ஒளி செய்தன.


“மக்களுக்கு ஒரு புதிய கடவுளே பிறந்து விட்டதுபோல் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் எல்லாம், எல்லோருக்காகவும்- ஒவ்வொன்றும்! இப்படித்தான் நான் உங்களைப் புரிந்து கொள்கிறேன், உண்மையைச் சொல்லப் போனால், நீங்கள் அனைவரும் தோழர்கள்: நீங்கள் அனைவரும் அன்பர்கள், நீங்கள் அனைவரும் சத்தியம் என்னும் தாய்க்குப் பிறந்த ஒரே வயிற்றுப் பிள்ளைகள்!”

மீண்டும் அவள் உணர்ச்சியாவேசத்துக்கு ஆளாகிவிட்டாள், அவள் பேச்சை நிறுத்தி மூச்செடுத்தாள் தழுவப் போகிற மாதிரி தனது கைகளை அகல விரித்துக் கொண்டு பேசினாள்;


“அந்த வார்த்தையை-தோழர்கள் என்னும் அந்த வார்த்தையை— எனக்கு நானே சொல்லிக்கொள்ளும்போது, என் இதயத்திலே அவர்கள் அணிவகுத்துச் செல்லும் காலடியோசையை என்னால் கேட்க முடிகிறது.”

அவள் தன் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டாள். லுத்மீலாவின் முகம் சிவந்தது: உதடுகள் துடிதுடித்தன, தெள்ளத் தெளிந்த பெருங் கண்ணீர்த்துளிகள் அவளது கன்னத்தில் வழிந்தோடின. “