பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

525



தாய் அவளைத் தன் கரங்களால் இறுகத் தழுவினாள்; மெளனமாகப் புன்னகை செய்தாள், தனது இதயத்தின் வெற்றியை எண்ணி அன்போடு மகிழ்ந்துகொண்டாள்.

அவர்கள் பிரியும்போது,லுத்மீலா தாயின் முகத்தைப் பார்த்து மெதுவாகச் சொன்னாள்:

“உங்களருகில் இருப்பது எவ்வளவு நன்றாயிருக்கிறது தெரியுமா?”

29

தாய் தெருவுக்கு வந்தவுடன், குளிர்ந்து விறைக்கும் வாடைக்காற்று அவளது உடம்பை இறுகப் பிணைத்து அவளது நாசியைத் துளைத்தது: ஒரு கணம் மூச்சையே திணற அடித்தது. அவள் நின்றாள், சுற்றுமுற்றும் பார்த்தாள். பக்கத்து மூலையில் தொள தொளத்த தொப்பியோடு ஒரு வண்டிக்காரன் நின்றுகொண்டிருந்தான். அதற்கு அப்பால் தெருக்கோடியில் கூனிக்குறுகி தனது தலையை உள்ளிழுத்து தோள்களுக்குள் புதைந்தவாறே ஒரு மனிதன் நடந்து சென்றான்; அவனுக்கும் அப்பால் ஒரு சிப்பாய் தன் செவிகளைத் தேய்த்து விட்டவாறே ஓடிக்கொண்டிருந்தான்.

“அந்த சிப்பாயை எங்காவது கடைக்கு அனுப்பியிருப்பார்கள்” என்று அவள் எண்ணினாள், எண்ணிக்கொண்டே, தனது காலடியில் நசுங்கி நொறுங்கும் பனிக்கட்டிகளின் சத்தத்தைக் கேட்டவாறே நடந்து போனாள். அவள் ரயில் நிலையத்துக்கு நேரங்காலத்தோடேயே வந்து சேர்ந்துவிட்டாள். அழுக்கும் அகத்தமும் அடைந்திருந்த மூன்றாம் வகுப்புப் பிராணிகளின் அறையில் ஒரே ஜனக்கூட்டமாக இருந்தது. அங்கிருந்த தொழிலாளர்களை எல்லாம் குளிர் உள்ளே அடித்து விரட்டியிருந்தது. வண்டிக்காரர்களும், வீடு வாசலற்று கந்தல் கந்தலான உடையணிந்த அனாதைகளும் அங்கு நிறைந்திருந்தார்கள். அங்கு பிரயாணிகளும் இருந்தார்கள். சில விவசாயிகள், மென்மயிர்க்கோட் அணிந்த கொழுத்த வியாபாரி ஒருவன், ஒரு மதகுரு, அம்மைத் தழும்பு முகங் கொண்ட அவரது மகள், ஐந்தாறு சிப்பாய்கள். நிலை கொள்ளாது தவிக்கும் சில அங்காடிக்காரர்கள் - இவர்கள்தான் அங்கிருந்தார்கள், ஜனங்கள் தேநீர் குடித்தார்கள்; புகைபிடித்தார்கள்; ஓட்கா அருந்தினார்கள்; சளசளத்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்; சிற்றுண்டிச்சாலையின் அருகே யாரோ குபுக்கென்று வாய்விட்டுச் சிரித்தார்கள். அவர்களது தலைக்கு மேலாக புகைச் சுழல் வட்டமிட்டுச் சுழன்றது. கதவுகளைத் திறக்கும்போது அவை முனகிக் கீச்சிட்டன, கதவுகளை அடைக்கும்போது ஜன்னல் கண்ணாடிகள் நடுநடுங்கி