பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

526

மக்சீம் கார்க்கி


கடகடத்து ஒசை செய்தன. அந்த அறையிலே சுருட்டு நாற்றமும் கருவாட்டும் நாற்றமுமே நிறைந்திருந்தன.


தாய் வாசல் பக்கத்தில் ஓர் எடுப்பான இடத்தில் உட்கார்ந்து காத்திருந்தாள். எப்போதாவது கதவு திறக்கப்பட்டால் அவளது முகத்தில் குளிர்ந்த காற்று உறைக்கும். அந்தக் குளிர் அவளுக்கு இன்பம் அளித்தது. அப்படிக் காற்று உறைக்கும் போதெல்லாம் அவள் அதை இழுத்து சுவாசித்து அனுபவித்தாள். ஜனங்கள் பெரும்பாலோர் மூட்டை முடிச்சுகளோடும் கனத்த மாரிக்காலத் துணிமணி அணிந்து உள்ளே வந்தார்கள். அவர்கள் கதவு வழியே நுழைய முடியாமல் திண்டாடினார்கள்: திட்டிக்கொண்டார்கள், தரை மீதோ பெஞ்சின் மீதோ சாமான்களைத் தாறுமாறாகப் போட்டுவிட்டு, தமது கோட்டுக் காலரிலும் கைகளிலும் தாடி மீசைகளிலும் படிந்துகிடக்கும் பனித்துகள்களைத் தட்டிவிட்டார்கள்.

ஒரு தோல் பெட்டியைக் கையில் தூக்கிக்கொண்டு ஒர் இளைஞன் உள்ளே வந்தான். சுற்றுமுற்றும் பார்த்தவாறே அவன் தாயை நோக்கி நேராக வந்தான்.

“மாஸ்கோவுக்கா?” என்று கேட்டான்.

“ஆமாம். தான்யாவைப் பார்க்கப் போகிறேன்” என்றாள் அவள்.

“ஆஹா !”

அவன் அந்தத் தோல் பெட்டியை அவளருகிலே பெஞ்சின் மீது வைத்தான்; சிகரெட்டைப் பற்ற வைத்தான்; தன் தொப்பியை உயர்த்தி வைத்தான்: அடுத்த வாசல் வழியாகச் சென்று மறைந்தான். தாய் அந்தக் குளிர்ந்து போன தோல் பெட்டியைத் தட்டிக் கொடுத்துக்கொண்டாள். பிறகு அதன் மீது முழங்கையை ஊன்றிச் சாய்த்தவாறே திருப்தியுணர்ச்சியோடு தன்னைச் சுற்றியள்ள ஜனங்களைப் பார்த்தாள். ஒரு நிமிஷம் கழித்து அவள் அந்த இடத்தை விட்டு எழுந்து வெளிவாசல் புறத்துக்கு அருகிலுள்ள பெஞ்சை நோக்கி நடந்தாள். அவள் தலையை நிமிர்த்தித் தன்னைக் கடந்து செல்பவரின் முகங்களைக் கவனித்தவாறே அந்தத் தோல் பெட்டியைக் கையில் சுமந்துகொண்டே நடந்து சென்றாள். பெட்டி ஒன்றும் அவ்வளவு பெரியதாகவோ கனமாகவோ இல்லை.


ஓர் இளைஞன் தனது குட்டையான கோட்டின் காலரைத் தூக்கி விட்டவாறே தாயின்மீது மோதினான். அவன் தன் கையால் தலையைத் தடவியவாறே பேசாமல் ஒதுங்கிச் சென்றான். அவனைக் கண்ட மாத்திரத்தில் அவனை எங்கோ பார்த்த மாதிரி தோன்றியது: அவள்