பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

527



திரும்பிப் பார்த்தாள். அவனும் தனது வெளுத்த கண்களால் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அந்தக் கூரிய பார்வை அவளது நெஞ்சைக் கத்திபோலக் குத்தியது; தோல் பெட்டியைப் பிடித்திருந்த அவளது கரம் பலமிழந்து தள்ளாடியது: திடீரென்று அந்தப் பெட்டியின் கனம் அதிகரித்துவிட்டதுபோல் தோன்றியது.


“இவனை நான் இதற்கு முன்பே எங்கோ பார்த்திருக்கிறேனே” என்று யோசித்தாள் அவள். தனது இதயத்திலே தோன்றிய புழுக்க உணர்ச்சியை அவள் வெளியேற்றிவிட முனைந்தாள். தனது இதயத்தை மெதுவாக, எனினும் தவிர்க்க முடியாதபடி உறையச் செய்யும் அந்த உணர்ச்சியை அலசி ஆராய அவள் விரும்பவில்லை. அதை ஒதுக்கித் தள்ளினாள். ஆனால் அந்த உணர்ச்சியோ விம்மி வளர்ந்து அவளது தொண்டைக் குழி வரையிலும் முட்டிமோதி அவளது வாயில் ஒரு வறண்ட, கசப்புணர்ச்சியை நிரப்பியது. அவள் தன்னை அறியாமலேயே அந்த மனிதனை மீண்டும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற ஆசைக்கு ஆளானாள். அவள் திரும்பினாள். அவன் அதே இடத்தில் கால்மாறி நின்றுகொண்டு, ஏதோ செய்ய எண்ணுவது போலவும் நின்று கொண்டிருந்தான். அவனது வலது கை கோட்டுப் பித்தான்களுக்கிடையில் நுழைந்து போயிருந்தது. இடது கை கோட்டுப் பைக்குள் இருந்தது. எனவே அவனது வலது தோள் இடது தோளைவிட உயர்ந்ததாகத் தோன்றியது.

அவள் பெஞ்சை நோக்கிச் சென்று மெதுவாகவும் ஜாக்கிரதையாகவும் தன்னுள் உள்ள எதுவோ நொறுங்கிப் போய்விடும் என்ற பயத்தோடு உட்காருவது போல் ஒரிடத்தில் அமர்ந்தாள். வரும் துன்பத்தை உணர்த்தும் கூரிய முன்னுணர்வினால் கிளரப்பட்ட நினைவில், இரண்டு முறை அம்மனிதளைப் பார்த்ததாக, திடுமென்று அவளுக்கு நினைவு வந்தது. பின் தப்பியோடும் போது நகரின் கோடியிலுள்ள வெட்டவெளி மைதானத்தில் அவனை ஒரு முறை அவள் கண்டிருக்கிறாள். இரண்டாவது முறையாக அவனை விசாரணையின்போது பார்த்திருக்கிறாள்: ரீபின் தப்பியோடும் போது தன்னை விசாரித்த போலீஸ்காரனுக்குத் தப்பான வழியைச் சுட்டிக் காட்டினாளே. அந்தப் போலீஸ்காரனும் நீதிமன்றத்தில் இவன் பக்கத்தில் அப்பொழுது நின்று கொண்டிருந்தான். சரிதான். தன்னைப் பின்தொடர்ந்துதான் அவன் வருகிறான் என்பதை அவள் உணர்ந்துகொண்டாள். தெளிவாக அறிந்து கொண்டாள்.


“அகப்பட்டுவிட்டேனா?” என்று அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். ஒரு நிமிஷம் கழித்து அவள் தன்னுள் நடுங்கிக்கொண்டே