பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

531



கூறியதற்காகத்தான், அந்த உண்மையை மறுத்துப் பேச ஒருவன்கூட இல்லை என்று நேற்று நான் உணர்ந்தேன்.”


கூட்டம் அவளைச் சுற்றி அமைதியோடு பெருகியது. வட்டமிட்டுச் சூழ்ந்து நின்றது.

“வறுமை, பசி, பிணி —தங்களது உழைப்புக்கு பிரதியாக: மக்களுக்கு இவைதான் கிடைக்கின்றன. சகல விஷயங்களுமே நமக்கு எதிராக இயங்குகின்றன. நமது வாழ்நாளெல்லாம், ஒவ்வொரு நாளும், நமது கடைசி மூச்சுவரை, இறுதி பலத்தையும் நமது உழைப்புக்காக அர்ப்பணம் செய்வதால் எப்போதும் நாம் அழுக்கடைந்து அவர்களால் ஏமாற்றவும் படுகிறோம். நாம் பெற வேண்டிய இன்பத்தையும், நலன்களையும் மற்றவர்கள் அறுவடை செய்து அனுபவிக்கிறார்கள். சங்கிலியால் கட்டிப் போடப்பட்ட நாய் மாதிரி நம்மை அவர்கள் அறியாமையில் ஆழ்த்தியுள்ளார்கள்—நமக்கு எதுவுமே தெரிவதில்லை. ஒவ்வொன்றுக்கும் பயப்படுகிறோம் — நாம் எதையும் தெரிந்து கொள்ளவே அஞ்சுகிறோம். நமது வாழ்க்கையே விடியாத இருள் நிறைந்த இரவாகப் போய்விட்டது!”

“சரிதான்!” என்று ஒரு மங்கிய குரல் எதிரொலித்தது.

“அவளது வாயை மூடு!”

கூட்டத்திற்குப் பின்னால் அந்த உளவாளியும் இரண்டு போலீஸ்காரர்களும் வருவதை தாய் கண்டுவிட்டாள். அவள் அவசர அவசரமாக மிஞ்சியிருந்த பிரதிகளை விநியோகிக்க முனைந்தாள். ஆனால் அவளது கை தோல் பெட்டியைத் தொட்டபோது. அவளது கையோடு யாரோ ஒருவனின் கையும் மோதியது.

“எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்துக்கொள்ளுங்கள்” என்று குனிந்துகொண்டே சொன்னாள் அவள்.

“கலைந்து போங்கள்!” என்று சத்தமிட்டுக்கொண்டே போலீஸ்காரர்கள் கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அந்த ஜனங்கள் வேண்டா வெறுப்பாக வழிவிட்டு, அந்தப் போலீஸ்காரர்களை முன்னேற விடாமல், தம்மையறியாமலேயே அவர்களை நெருக்கித் தள்ளினார்கள். அன்று விரித்த பிரகாசமான கண்களோடு அந்த அன்புருவான கிழவியைக் கண்டு எல்லாரும் தவிர்க்க முடியாதபடி கவர்ச்சி கொண்டார்கள். வாழ்க்கையில் புறக்கணிக்கப்பட்டு, ஒருவருக்கொருவர் ஒட்டின்றிப் பிளந்து போயிருந்த அந்த ஜனங்கள், அந்தப் பொழுதில் தாங்கள் அனைவரும் ஒரே இனமாக மாறிவிட்டது போல் உணர்ந்தார்கள், அந்த உத்வேகமான வார்த்தைகளை ஆழ்ந்த மன உணர்ச்சியோடு கேட்டார்கள். அந்த வார்த்தைகள்தான் வாழ்க்கையில் அநீதியால் துன்பத்துக்காளான எண்ணற்ற இதயங்கள்