பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

39


காலுறைகள் இந்தக் குளிருக்கு மிகவும் மெல்லியவை. நான் வேண்டுமானால் உங்களுக்கு கம்பளி உறை தரட்டுமா?”

“நன்றி, பெலகேயா நிலவ்னா. ஆனால், கம்பளி உறை காலெல்லாம் குத்துமே!” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் நதாஷா.

“காலில் குத்தாத கம்பளி உறை நான் தருகிறேன்” என்றாள் தாய்.

நதாஷா ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தாள், அந்தப் பார்வை அந்த வயதான தாயை என்னவோ செய்தது: துன்புறுத்தியது.

“என் அசட்டுத்தனத்தை மன்னித்துவிடுங்கள். நான் இதயபூர்வமாகச் சொன்னேன்” என்று மெதுவாய்ச் சொன்னாள் தாய்.

“நீங்கள் எவ்வளவு அன்பாயிருக்கிறீர்கள்!” என்று அமைதியுடன் கூறிவிட்டு, தாயின் கரத்தைப் பற்றி கனிவோடு இறுகப்பிடித்து. விடைபெற முனைந்தாள் நதாஷா.

“போய்வருகிறேன், அம்மா!” என்று கூறிவிட்டு, அவளது கண்களையே பார்த்தான் ஹஹோல்; பிறகு அவன் வெளியே சென்ற நதாஷாவுக்குப் பின்னால் வாசல் நடையில் குனிந்து சென்றான்.

தாய் தன் மகனை நோக்கினாள்; அவன் வாசல் நடையருகே புன்னகை புரிந்தவாறே நின்றுகொண்டிருந்தான். “நீ எதைப் பார்த்துச் சிரிக்கிறாய்?” என்று அவள் குழப்பத்துடன் கேட்டாள்.

“சும்மாதான். குஷி பிறந்தது. சிரித்தேன்”

“நான் கிழவியாயிருக்கலாம்: முட்டாளாயிருக்கலாம்; இருந்தாலும் எனக்கும் நல்லதைப் புரிந்துக்கொள்ளமுடியும்” என்று லேசான மனத்தாங்கலுடன் சொன்னாள் அவள்.

“ரொம்ப நல்லது! நேரமாகிவிட்டது, படுத்துக் கொள்ளுங்களேன்!” என்றான் அவன்.

“படுக்கத்தான் போகிறேன்”

அவள் மேஜையிலிருந்த பாத்திர பண்டங்களை அகற்றுவதில் பெரும் பரபரப்புக் காட்டிக்கொண்டாள். அதில் அவளுக்கு ஒரு ஆனந்தம். அந்தப் பரபரப்பில் அவளுக்கு மேலெல்லாம் வியர்த்துக்கூடக் கொட்டிவிட்டது. அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிமையோடு நடந்தேறி, அமைதியோடு முற்றுப் பெற்றதை எண்ணி அவள் சந்தோஷப்பட்டுக்கொண்டாள்.

“பாஷா. நல்லா யோசனை பண்ணித்தான் எல்லாம் செய்திருக்கிறாய்!’ என்று சொன்னாள் அவள். “அந்த ஹஹோல் ரொம்ப நல்லவன், அந்தப் பெண்—அம்மாடி!’ அவள் எவ்வளவு கெட்டிக்காரியாயிருக்கிறாள்! அவள் யார்?"