பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

43


“நீங்கள் எப்படிப்பட்டவர்!” என்றாள் பெலகேயா; “பெற்றோர்களையும் உற்றார்களையும் இழந்து நிற்கிறீர்களே....” அவள் பெருமூச்செறிந்தாள்; பிறகு மெளனமானாள். அவளுக்குத் தன் சிந்தனைகளை உருக்கொடுத்து வெளியிட முடியவில்லை. ஆனால், நதாஷாவின் முகத்தை பார்க்கும்போது, முன் உணர்ந்தது போலவே, இனந்தெரியாத ஏதோ ஒன்றுக்குத் தான் நன்றி செலுத்தித்தானாக வேண்டும் என்ற உணர்ச்சி அவள் உள்ளத்தில் பிறந்தோங்கியது. அவள் அந்தப் பெண்ணுக்கு எதிராக, தரையில் உட்கார்ந்தாள்; அந்தப் பெண்ணோ தனது தலையை முன்னே தாழ்த்தி, இனிய புன்னகை புரிந்துகொண்டிருந்தாள்.

“பெற்றோர்களை இழந்து நிற்கிறேனா?” என்றாள் அவள். ‘அது ஒன்றும் பிரமாதமில்லை. என் தந்தை ஒரு முரட்டு ஆசாமி; என் சகோதரனும் அப்படித்தான். மேலும் அவன் ஒரு குடிகாரன். எனது மூத்த சகோதரி மகிழ்ச்சியற்றுப் போய்விட்டாள். அவளைவிடப் பல் வருடங்கள் மூத்தவன் ஒருவன்தான் அவள் கணவன், பெரிய பணக்காரன்தான்; ஆனால் படுமோசமானவன், மகாக் கஞ்சன். என் அம்மாவை நினைத்தால் எனக்கு வருத்தம்தான் உண்டாகும். அவளும் உங்களைப்போல், சாதாரணமான பெண்மணிதான். சுண்டெலியைப்போல், சிறு உருவம்; சுண்டெலிபோலவே குடுகுடுவென்று ஓடுவாள்; எதைக் கண்டாலும் அவளுக்கு ஒரே பயம்தான். சில சமயங்களில் அவளைப் பார்க்க வேண்டுமென்று அப்படி ஆசைப்படுவேன்.... “

“அடி என் அப்பாவிப் பெண்ணே !” என்று தனது தலையை வருத்தத்தோடு அசைத்துக்கொண்டே சொன்னாள் தாய்.

அந்தப் பெண் மீண்டும் தன் தலையை உயர்த்தி, எதையோ பிடித்துத் தூரத் தள்ளுவதைப்போல, கையை உதறி நீட்டினாள்.

“இல்லை, இல்லை, சமயங்களில் எனக்கு ஒரே சந்தோஷம், தாங்க முடியாத சந்தோஷம்!”

அவளது முகம் வெளுத்தது, அவளது நீலக்கண்கள் ஒளிபெற்றன. அவள் தன் கரங்களைத் தாயின் தோளின் மீது வைத்துக்கொண்டாள்.

“எத்தகைய மகத்தான வேலையில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் என்று மட்டும் உங்களுக்குத் தெரிந்தால், புரிந்தால்.....” கம்பீரமாகவும், மெதுவாகவும் சொன்னாள் நதாஷா.

ஏதோ ஒரு பொறாமை உணர்ச்சி பெலகேயாவின் இதயத்தைத் தொடுவது போலிருந்தது.