பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

47


ஒரு நாள் அவள் தனது உதடுகளை வெறுப்போடு பிதுக்கிக்கொண்டு, ஹாஹோலிடம் போய் சாஷாவைப்பற்றிச் சொன்னாள்.

“அவள் மிகவும் கண்டிப்பான பேர்வழி! ஒவ்வொருவரையும் அதிகாரம் பண்ணுகிறாள். ‘நீ இதைச் செய், நீ அதைச் செய்’ என்று உத்தரவு போடுகிறாள்!”

ஹஹோல் வாய்விட்டு உரக்கச் சிரித்தான்.

“சரியான குறி பார்த்து ஒரு போடு போட்டீர்கள் அம்மா, ரொம்ப சரி! அப்படித்தானே பாவெல்?” என்றான். பிறகு அவளைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டுக்கொண்டு. “பிரபு வம்சம்” என்றான்.

“அவள் ஒரு நல்ல பெண்!” என்று உணர்ச்சியற்றுச் சொன்னான் பாவெல்.

“அதுவும் உண்மைதான்” என்றான் ஹஹோல்: “அவள் என்ன செய்ய வேண்டும்; நாம் என்ன விரும்புகிறோம், நம்மால் என்ன முடியும்—என்பது மட்டும் அவளுக்குப் புரியவில்லை.”

புரியாத எதையோ பற்றி அவர்கள் விவாதித்தார்கள்.

சாஷா பாவெலிடமும் கண்டிப்பாக நடந்துகொள்வதையும், சமயங்களில் அவனைப் பார்த்து உரக்கச் சத்தம் போடுவதையும் தாய் கண்டிருக்கிறாள். அம்மாதிரி வேளைகளில் பாவெல் பதிலே பேசுவதில்லை. வெறுமனே சிரிப்பான், நதாஷாவை எத்தனை அன்பு கனியப் பார்ப்பானோ, அது போலவே சாஷாவின் முகத்தையும் பார்ப்பான். தாய்க்கு இதுவும்கூடப் பிடிக்கவில்லை.

எல்லாரையும் தழுவி நிற்கும் பெருமகிழ்ச்சி தாயைச் சில சமயங்களில் வியப்புக்குள்ளாக்கும். இம்மாதிரியான குதூகலம், வெளிநாட்டிலுள்ள தொழிலாளர் இயக்கங்களைப் பற்றிப் பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் படிக்கின்றபோதுதான் ஏற்படுவது வழக்கம். அப்போது அவர்கள் அனைவருடைய கண்களும் குதூகலத்தால் ஒளிபெற்றுத் துலங்கும்; அவர்கள் குழந்தைகளைப்போலக் குதூகலம் கொள்வார்கள்; வாய்விட்டுக் கலகலவென்று சிரிப்பார்கள்; உற்சாகத்தில் ஒருவர் தோளை ஒருவர் தட்டிக் கொடுத்துக்கொள்வார்கள்.

“ஜெர்மன் தோழர்கள் வாழ்க!” என்று யாரோ ஒருவன் தனக்கு ஏற்பட்ட ஆனந்தத்திலேயே மூழ்கி, வெறிகொண்ட மாதிரி கத்தினான்.

“இத்தாலியத் தொழிலாளர்கள் நீடூழி வாழ்க” என்று அவர்கள் வேறொரு முறை கத்தினார்கள்.