பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

மக்சீம் கார்க்கி


ஹஹோல் தனது காலைத் தரையில் அழுத்தித் தேய்த்துக் கொண்டான்; பிறகு மீண்டும் அவனது சீட்டிக்குரல் அறைக்குள் எதிரொலித்தது.

“இதை அவளிடம் நான் சொல்லிவிட்டால் என்ன?” என்று கேட்டான் அவன்.

“எதை?”

“அவளிடம் நான்.....” என்று மெதுவாக ஆரம்பித்தான் ஹஹோல்.

“எதற்காகச் சொல்ல வேண்டும்”

ஹஹோல் நடக்காமல் நின்றுவிட்டதைத் தாய் உணர்ந்து கொண்டாள்: அவன் சிரித்துக்கொள்வது போல அவளுக்குத் தோன்றியது.

“நீ ஒரு பெண்ணைக் காதலித்தால் அதை அவளிடம் சொல்லித்தானே ஆகவேண்டும்! இல்லையேல் பயனென்ன?”

பாவெல் தன் கையிலிருந்த புத்தகத்தைப் பட்டென்று மூடினான்.

“என்ன பயன் உனக்கு வேண்டும்?” என்று கேட்டான் பாவெல்.

இருவரும் வெகுநேரம்வரையிலும் வாயே திறக்கவில்லை.

“சரி..........” என்று எதையோ கேட்க முனைந்தான் ஹஹோல்.

“அந்திரேய்! உனக்கு என்ன வேண்டும் என்பதைப்பற்றி முதலில் நீயே தெளிவோடு இரு” என்று மெதுவாக ஆரம்பித்தான் பாவெல். “அவள் உன்னைக் காதலிக்கிறாள் என்றே வைத்துக்கொள் - அதுவே எனக்குச் சந்தேகம்தான்: ஒரு பேச்சுக்கு அப்படி வைத்துக்கொள் - பிறகு நீங்கள் மணம் செய்து கொள்வீர்கள். நல்ல ஜோடிதான்! அவளோ படிப்பாளி; நீயோ ஒரு தொழிலாளி. குழந்தைகள் பிறக்கும்; நீதான் அந்தக் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும். அதற்காக நீ எவ்வளவு உழைக்க வேண்டும் தெரியுமா? குழந்தைகளுக்காக, ஒரு துண்டு ரொட்டிக்காக, வீட்டு வாடகைக்காக நீ மாடாய் உழைக்கப் போவாய். நாம் எடுத்துக்கொண்ட கருமத்திலிருந்து நீ மட்டுமல்ல, நீங்கள் இருவருமே விலகிப்போய்விடுவீர்கள்.”

அந்த அறையில் அமைதி நிலவியது. பிறகு பாவெலே மீண்டும் சொன்னான். இப்போது அவனது குரலில் அத்தனை வேகம் இல்லை.

“அந்திரேய்! இதையெல்லாம் நீ மறந்துவிடுவதே நல்லது. அவளுக்குக் குழப்பத்தை உண்டாக்கிவிடாதே."