பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

57


மீண்டும் மௌனம். சுவரிலிருந்த கடிகாரத்தின் பெண்டுலம் மட்டும் அசைந்து அசைந்து ஒவ்வொரு கணத்தையும் அளந்து சொல்லிக்கொண்டிருந்தது.

“பாதி மனம் காதலிக்கிறது; பாதி மனம் பகைக்கிறது. இதுவும் ஒரு மனமா?” என்று சொன்னான் ஹஹோல்.

புத்தகத்தின் தாள்கள் சலசலத்தன; பாவெல் மீண்டும் படிக்கத் தொடங்கியிருக்க வேண்டும். அவனது தாய் கண்களை மூடியவாறே கிடந்தாள்; மூச்சு விடக்கூடப் பயந்தாள். அவள் ஹஹோலுக்காக இதய பூர்வமாய் அனுதாபப்பட்டாள். ஆனால் தன் மகனுக்காக இன்னும் அதிகமாக அனுதாபப்பட்டாள்.

“அட, என் அருமைக் கண்ணே...” என்று யோசித்தாள்.

“அப்படியென்றால் நான் ஒன்றுமே சொல்லக்கூடாது என்று தானே நினைக்கிறாய்?” என்று திடீரெனக் கேட்டான் ஹஹோல்.

“அதுதான் நல்லது” என்று அமைதியாகச் சொன்னான் பாவெல்.

“சரி, அப்படியே செய்வோம்” என்றான் ஹஹோல். சில விநாடிகள் கழித்து அவன் மெதுவாக, துக்கம் தோய்ந்த குரலில் பேசினான்; “பாவெல், உனக்கு இந்த மாதிரி நிலைமை ஏற்பட்டால், அப்போது தெரியும் அந்தச் சங்கடம்.”

“இப்பொழுதே, சங்கடமாய்த் தானிருக்கிறது!”

காற்று அந்த வீட்டின் சுவர்களில் மோதிச் சென்றது; கடிகாரத்தின் பெண்டுலம் காலக் கணக்கைக் கூறிட்டுச் சொல்லிக்கொண்டேயிருந்தது.

“இது ஒன்றும் விளையாட்டல்ல இது...” என்று மெதுவாகச் சொன்னான் ஹஹோல்.

தாய் தனது முகத்தைத் தலையணையில் புதைத்துக்கொண்டு அரவமில்லாது அழுதாள்.

காலையில் எழுந்தவுடன் தாய் அந்திரேயைப் பார்த்தாள். அவனது உருவம் குறுகிவிட்டதுபோலத் தோன்றியது; அவன் மீது அவளுக்கு அதிகப் பிரியம் உண்டாயிற்று. அவளது மகனோ மெலிந்து நெட்டுவிட்டுப்போனது போலிருந்தான்; எப்போதும் போலவே அவன் மௌனமாயிருந்தான். இதுவரையிலும் அவள் ஹஹோலை அந்திரேய் அனிசிமோவிச் என்றுதான் அழைத்து வந்தாள், அன்றோ அவள் தன்னையுமறியாது கூறினாள்: