பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

மக்சீம் கார்க்கி


“அந்திரியூஷா[1]! உங்கள் பூட்சுகளைச் சீக்கிரம் பழுது பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் ஜலதோஷம் பிடித்துவிடும்.”

“அடுத்த சம்பளத் தேதியில் நான் புதுப்பூட்சுகள் வாங்கிவிடுவேன்” என்று சிரித்துக்கொண்டு பதில் சொன்னான் அந்திரேய். பிறகு தனது வாட்டசாட்டமான கரங்களை அவளது தோளின்மீது போட்டுக்கொண்டு பேசினான்: “நீங்கள்தான் எனது உண்மையான தாயாக, இருக்கலாம். ஆனால், நீங்கள் அதை ஒப்புக்கொள்ளமாட்டீர்கள். நான் மிகவும் கோரமாயிருக்கிறேன், இல்லையா?”

அவள் பதில் சொல்லாமல் அவனைச் செல்லமாக அறைந்தாள். அவள் எத்தனையெத்தனை அன்பு மொழிகளையோ கூற நினைத்தாள், எனினும் அவளது இதயம் பரிவுணர்ச்சியினால் பரிதவித்தது: வார்த்தைகள் அவளது உதட்டைவிட்டு வெளிவரவே இல்லை.

9

அந்தக் குடியிருப்பிலுள்ள மக்கள், நீல மையால் எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வினியோகித்த சோஷலிஸ்டுகளைப் பற்றிப் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். அந்தப் பிரசுரங்கள் தொழிற்சாலையின் ஒழுங்குமுறை பற்றி காரசாரமாக விமர்சனம் செய்தன; பீட்டர்ஸ்பர்க்கிலும், தென் ருஷியாவிலும் நடைபெறும் வேலை நிறுத்தங்களைப்பற்றிக் கூறின; தங்களது சொந்த நல உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகத் தொழிலாளர் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் எனப் போதித்தன.

தொழிற்சாலையில் நல்ல காசு பார்த்துவந்த நடுத்தர வயதினர் அதைக் கண்டு கோபாவேசம் கொண்டார்கள்.

“கலவரக்காரப் பயல்கள்! இவர்களுக்குச் செம்மையாய்க் கொடுக்கணும்” என்று கூறிக்கொண்டார்கள். அந்தத் துண்டுப் பிரசுரங்களைத் தமது முதலாளிமாரிடம் கொண்டு போய்க் கொடுத்தார்கள்.

இளவட்டப் பிள்ளைகள் அந்தப் பிரசுரங்களை உற்சாகத்தோடு வாசித்தார்கள்.

“இதெல்லாம் உண்மைதானே!” என்றார்கள் அவர்கள்.


  1. அந்திரியூஷா – அந்திரேயைச் செல்லமாக அழைப்பது –மொ-ர்.