பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

59


உழைத்து, உழைத்து ஓடாகிப்போன பெரும்பாலான தொழிலாளர்கள் நம்பிக்கையற்றுப் பேசினார்கள்: “இதனால் எல்லாம் என்ன நடந்துவிடப்போகிறது? அதெல்லாம் ஒன்றும் நடக்காத காரியம்.”

எனினும் அந்தத் துண்டுப் பிரசுரங்கள் தொழிலாளர் மத்தியில் ஒரு கிளர்ச்சியை உண்டுபண்ணிவிட்டன. ஆனால், அந்த ஒருவார காலத்தில் வேறு புதுப் பிரசுரங்கள் ஏதும் வரக்காணோம். உடனே அந்தத் தொழிலாளர்கள் மட்டும் தம்முள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள்; “ஒருவேளை அவர்கள் அச்சடிப்பதை நிறுத்திவிட்டார்கள் போலிருக்கிறது!”.

ஆனால் அடுத்த திங்கட்கிழமையன்று எப்படியோ மீண்டும் புதுப் பிரசுரங்கள் வினியோகம் ஆயின. மீண்டும் தொழிலாளர்கள் தம்முள் குசுகுசுவென்று பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

தொழிற்சாலையிலும் சாராயக் கடையிலும் யாருக்குமே இனந்தெரியாத ஆட்கள் சிலரின் நடமாட்டம் அதிகரித்தது. இந்த ஆட்கள் அங்குமிங்கும் கவனமாகப் பார்ப்பதும், யாரிடமாவது எதையாவது கேட்பதும், ஒவ்வொருவர் பேசும்போதும் குறுக்கே தலையிட்டுப் பேசுவதுமாக இருந்தார்கள். அவர்களது அளவு கடந்த எச்சரிக்கையாலும் அவர்கள் ஜனங்களோடு பலவந்தமாய்ப் பழக முனையும் காரணத்தினாலும் அவர்கள் பிறரது சந்தேகப் பார்வைக்கு ஆளானார்கள்.

இந்தக் கிளர்ச்சிக்கெல்லாம் தனது மகனது வேலையே காரணம் என்பதைத் தாய் உணர்ந்துகொண்டாள். அவனைச் சுற்றி மக்கள் எப்படிக் குழுமுகிறார்கள் என்பதையும் அவள் கண்டாள். அவனுக்கு என்ன நேர்ந்துவிடுமோ என்ற கவலையோடு, ஒரு பெருமித உணர்ச்சியும் அவளது இதயத்தில் கலந்தது.

ஒரு நாள் மாலையில் மரியா, விலாசவின் ஜன்னல் கதவைத் தட்டினாள்: தாய் கதவைத் திறந்தவுடன், மரியா சிறிது உரத்த குரலில் இரகசியமாகச் சொன்னாள்:

“ஜாக்கிரதையாயிரு, பெலகேயா! இந்தப் பிள்ளைகளுக்கு ஆபத்து வரப்போகிறது. இன்றிரவு உன் வீட்டைச் சோதனை போடப்போகிறார்கள், மாசினுடைய வீட்டையும், நிகலாயின் வீட்டையும் கூடத்தான்.”

மரியாவின் தடித்த உதடுகள் துடித்தன. அவள் தனது கொழுத்த மூக்கினால் பெருமூச்சுவிட்டாள். திருகத்திருக்க விழித்தாள். தெருவில்