பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

மக்சீம் கார்க்கி


யாரையோ கண்களால் பின்தொடர்ந்தாள். அங்குமிங்கும் பரக்கப் பரக்கப் பார்த்தாள்.

“எனக்கு ஒன்றுமே தெரியாது. நான் உனக்கு ஏதும் சொல்லவில்லை, நான் உன்னை இன்று பார்க்கக்கூடவில்லை, புரிந்ததா?”

அவள் போய்விட்டாள்.

ஜன்னலை மூடிய பிறகும். தாய் மெதுவாக நாற்காலிக்குள் விழுந்து புதைந்துகிடந்தாள். ஆனால், தன் மகனுக்கு நேரவிருக்கும் பேராபத்தைப் பற்றிய பயபீதி அவளை உடனேயே எழுந்திருக்கச் செய்தது. அவள் அவசர அவசரமாக உடை உடுத்திக்கொண்டாள்; தலைமீது ஒரு கச்சையை மடித்துக் கட்டிக்கொண்டாள்; பியோதர் மாசினிடம் ஓடிப்போனாள்; அவன் சீக்காயிருந்தான். எனவே வேலைக்குப் போகவில்லை அவள் உள்ளே நுழைந்தபோது. அவன் ஜன்னலருகே உட்கார்ந்து ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான்; வலது கையை இடது கையால் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தான். நோய்வாய்ப்பட்டிருந்த அவனது வலது கைப் பெருவிரல் இயற்கைக்கு மாறாக நிமிர்ந்து நின்றது. அவள் சொன்ன செய்தியைக் கேட்டதும் அவனது முகம் வெளுத்தது. அவன் துள்ளியெழுந்தான்.

“ஓ, அப்படியா சேதி!” என்று முணுமுணுத்தான்.

“சரி. நாம் என்ன செய்யலாம்?” என்று நடுநடுங்கும் சுரத்தால் நெற்றி வியர்வையை வழித்துக்கொண்டே கேட்டாள் பெலகேயா.

“ஒரு நிமிஷம் பொறுங்கள், பயப்படாதீர்கள்” என்று கூறிவிட்டு, தனது சுருட்டைத் தலையை, இடது கையால் பின்னோக்கிக் கோதி விட்டுக்கொண்டான் பியோதர் மாசின்.

“நீங்களே பயப்படுகிறீர்களே!” என்று அவள் கத்தினாள்.

“நானா?” அவன் முகம் கன்றிப்போயிற்று; வலிந்து புன்னகை செய்துகொண்டே, “ஆமாம்... ம்.... அது போகட்டும்........நாம் இதை உடனே பாவெலுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நான் யாரையாவது அனுப்புகிறேன். நீங்கள் வீட்டுக்குப் போங்கள், வீணாகக் கவலைப்படாதீர்கள். அவர்கள் நம்மை யென்ன அடிக்கவா செய்வார்கள்? அடிப்பார்களா?” என்று கூறினான்.

வீட்டுக்குத் திரும்பி வந்தவுடன் தாய் அங்கிருந்த சகல புத்தகங்களையும் ஒன்று சேர்த்தாள். அந்தப் புத்தகங்களை மார்பின் மீது அணைத்துப் பிடித்தவாறு அங்கும் இங்கும் நடந்து தத்தளித்தாள்;