பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

மக்சீம் கார்க்கி


திகைப்பார்கள்; வெட்கப்படுவார்கள். ஆனால், தாங்கள் மிகவும் மூர்க்கமாகவும் கோபமாகவும் இருப்பதாகப் பாசாங்கு செய்வார்கள். தங்களது தொழில் எவ்வளவு படுகேவலமானது என்பதை உணர்வார்கள். ஒரு தடவை இப்படித்தான் என்னுடைய சாமான்களையெல்லாம் அவர்கள் தாறுமாறாய் உலைத்தெறிந்து சீர்குலைத்துவிட்டார்கள். பிறகு அந்தப் பரிதவிப்பால், அவர்கள் இன்னது செய்வது எனத் தெரியாமல் திகைத்து வெளியேறினார்கள். போய்விட்டார்கள். இன்னொரு முறை அவர்கள் போகும்போது என்னையும் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். பிறகு என்னைச் சிறையில் போட்டு, நாலுமாத காலம் உள்ளே வைத்திருந்தார்கள். சிறைக்குள் போனால் நீ வெறுமனே உட்கார்ந்து இருப்பதைத் தவிர வேறு வேலையே கிடையாது. பிறகு சிறையிலிருக்கும்போது சம்மன்கள் வரும் உன்னைத் தெருக்களின் வழியே சிப்பாய்கள் நடத்திச் செல்வார்கள், யாரோ ஒரு பெரிய தலைவன் உன்னை என்னென்னவோ கேள்வி கேட்பான். அந்தத் தலைவர்களில் எவனும் அப்படி ஒன்றும் புத்திசாலியல்ல, அர்த்தமற்று எது எதையோ கேட்பான். பிறகு மீண்டும் சிறைக்குக் கொண்டு போகுமாறு சிப்பாய்களுக்கு கட்டளையிட்டு உன்னை அங்குமிங்குமாக வெட்டியாக இழுத்தடிப்பார்கள். அவர்கள் வாங்குகிற சம்பளத்துக்கு ஏதாவது மாரடித்து ஆக வேண்டுமே! கொஞ்ச நாள் போய்விட்டால், அவர்களே சலித்துப்போய் உன்னை விடுதலை செய்துவிடுவார்கள் அவ்வளவுதான்!”

“அந்திரியூஷா நீங்கள் என்ன இப்படிப் பேசுகிறீர்கள்?” என்று கேட்டாள் தாய்.

அடுப்பை மூட்டி ஊதுவதற்காகக் குனிந்து முழங்காலிட்டிருந்த ஹஹோல் நிமிர்ந்து பார்த்தான். அவன் முகம் சிவந்து போயிருந்தது. பிறகு மீசையைத் திருகிவிட்டுக்கொண்டு கேட்டான்.

“எப்படிப் பேசுகிறேன்?”

“என்னவோ யாரும் உங்களைத் துன்புறுத்தாத மாதிரி!”

“இந்த உலகில் துன்புறாத ஆத்மா எங்கே அம்மா இருக்கிறது?” என்று இளம் புன்னகையோடு கூறிக்கொண்டே எழுந்து நின்று தலையை ஆட்டிக்கொண்டான். “அவர்கள் என்னை எவ்வளவோ துன்புறுத்தத்தான் செய்தார்கள்; ஆனால் எனக்கு எல்லாம் பழகிப்போய்விட்டது; மரத்துப் போய்விட்டது. அவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்று தெரித்திருந்தும் நாம் என்ன செய்துவிட முடியும்? அந்தத் துன்பங்களையெல்லாம் பொருட்படுத்தினால், என் வேலைதான் கெடும்; அந்தத்