பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

63


துன்பங்களையெல்லாம் நினைத்துப் பார்ப்பதும் வீணான நேரக் கொலைதான். இதுதானம்மா வாழ்க்கை! சமயங்களில் மனிதர்களைக் கண்டாலே எனக்குக் கோபம் வரும். எண்ணிப்பார்த்தேன்; இதிலென்ன பயன்? ஒவ்வொருத்தனும் அடுத்தவன் நம்மை அறையப் போகிறான் என்று எண்ணித்தான் பயப்படுகிறான்; எனவே முதல் அடியை இவனே கொடுக்க முற்படுகிறான். இப்படித்தானம்மா வாழ்க்கை இருக்கிறது.”

அவனது வார்த்தைகள் இதசுகத்தோடு பிறந்து வழிந்தன. அந்தப் பேச்சினால் அவளுக்கு அன்று நடக்கவிருக்கும் சோதனையைப் பற்றிய பயம் நீங்க ஆரம்பித்தது. அவனது முழிக் கண்களில் களிப்பு குடிகொண்டது. அவன் எவ்வளவு கோரமாயிருந்தாலும், லாவகமான உடற்கட்டு கொண்டவன் என்று கண்டாள்.

தாய் பெருமூச்செறிந்தாள்.

“அந்திரியூஷா! கடவுள் உங்களுக்கு அருள் செய்யட்டும்!” என்று மனதார வாழ்த்தினாள் அவள்.

ஹஹோல் தேநீர் அடுப்பருகே சென்று குந்தி உட்கார்ந்தான்.

“எனக்கு நல்லருள் கொஞ்சம் கிடைத்தாலும் போதும். நான் அதை ஒன்றும் மறுதலிக்க மாட்டேன். ஆனால், அவ்வருளுக்காக நான் கை நீட்டி யாசகம் கேட்கமாட்டேன்!” என்றான் ஹஹோல்.

பாவெல் புழக்கடையிலிருந்து வந்து சேர்ந்தான்.

“அவர்கள் ஒன்றும் கண்டுபிடிக்கப் போவதில்லை” என்று நம்பிக்கை நிறைந்த குரலில் சொல்லிவிட்டு, முகம், கை கழுவினான். பிறகு கைகளைத் துடைத்துக்கொண்டு, தாயின் பக்கமாகத் திரும்பினான்:

“நீங்கள் மாத்திரம் பயந்ததாகக் காட்டிக்கொண்டால், உடனே அவர்களுக்குச் சந்தேகம் தட்டிவிடும். இந்த வீட்டில் ஏதோ இருக்கப் போய்த்தான் நீங்கள் இப்படி நடுங்கிச் சாகிறீர்கள் என்று அவர்கள் நினைத்துவிடுவார்கள். நாம் தப்பாக எதுவும் செய்யவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நியாயம் நமது பக்கத்தில்தான் இருக்கிறது. அந்த நியாயத்துக்காக, நாம் நமது ஆயுள் முழுவதுமே பாடுபடுவோம். அது ஒன்றுதான் நம்மீதுள்ள குற்றம்! பிறகு நாம் எதற்காகப் பயப்பட வேண்டும்?”

“நான் தைரியமாக இருப்பேன், பாஷா!” என்று அவள் உறுதி கூறினாள். ஆனால் உடனேயே அவள் மனங்குலைந்து பரிதாபமாகக் கூறினாள்: “அவர்கள் சீக்கிரம் வந்து காரியத்தை முடித்துக்கொண்டு போனால் தேவலை!"