பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

மக்சீம் கார்க்கி


ஆனால் அவர்கள் அன்றிரவு வரவில்லை ; காலையில் அந்தப் பிள்ளைகள் தன்னைக் கேலி செய்ய முனைவதற்கு முன்னால், தானே தன்னைக் கேலி செய்து சமாளித்துக்கொள்ள முயன்றாள்.

“பார்த்தாயா? பயம் வருவதற்கு முன்னாலேயே நான் பயந்து செத்தேன்” என்று கூறிக்கொண்டாள்.

10

கலவரம் நிறைந்த அந்த இரவுக்குப் பிறகு, சுமார் ஒரு மாத காலம் கழித்து போலீஸார் வந்தேவிட்டார்கள். அன்று நிகலாய் பாவெலையும் அந்திரேயையும் கண்டு பேசுவதற்காக வந்திருந்தான். அவர்கள் மூவரும் தங்களது பத்திரிகை விஷயமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நடு இரவு. ஏற்கெனவே படுக்கச் சென்றுவிட்ட தாய் தூக்கக் கலக்கத்தில் சொக்கியவாறே அவர்களது அமைதியும் ஆர்வமும் நிறைந்த பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அப்போது அந்திரேய் ஜாக்கிரதையாக தனக்குப் பின்னால் கதவைத் தாளிட்டுவிட்டுச் சமையலறையைக் கடந்து சென்றான். அந்தச் சமயம் முற்றத்தில் ஏதோ தகரவாளி உருளும் சத்தம் கேட்டது; அதைத் தொடர்ந்து கதவும் படாரென்ற திறக்கப்பட்டது. அந்திரேய் சமையலறைக்குள் தாவி வந்து சேர்ந்தான்.

“அது பூட்ஸ் லாடச் சத்தம்தான்!” என்று இரகசியமாகச் சொன்னான்.

நடுங்கும் கைகளால் தன் ஆடையைச் சரிசெய்தபடி, படுக்கையிலிருந்து துள்ளியெழுந்தாள் தாய். ஆனால் பாவெல் வாசல் நடைக்கு வந்து அமைதியாகச் சொன்னான்.

“நீங்கள் போய்ப் படுங்கள். உங்களுக்கு உடம்பு சரியில்லை!” வெளிவாசலருகில் ஏதோ சலசலப்புக் கேட்டது. பாவெல் வாசலுக்கு வந்து கதவைத் திறந்து, சத்தமிட்டான்.

“யார் அங்கே ?”

திடீரென்று ஓர் உயரமான, சாம்பல் நிற உருவம் அவன் முன் தோன்றியது. அதைத் தொடர்ந்து வந்தது இன்னொரு உருவம்; இதற்குள் இரண்டு போலீஸ்காரர்கள் பாவெலைப் பிடித்துத் தள்ளிவிட்டு, அவனுக்கு இரு புறத்திலும் காவல் நிற்கத் தொடங்கிவிட்டார்கள்.

“எங்களை எதிர்பார்க்கவில்லை, இல்லையா? ஹ” என்று ஓர் உரத்த குரல் கேலியாகக் கேட்டது.