பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

மக்சீம் கார்க்கி


“ஜாக்கிரதையாயிரு!”

பிறகு அவன் தான் கொண்டு வந்திருந்த தஸ்தாவேஜுகளைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினான்.

ஜன்னலுக்கு வெளியே நிலவொளி! எந்தவிதக் கவலையுமற்றுக் காய்ந்துகொண்டிருந்தது. அந்த வீட்டின் முன்புறமாக யாரோ நடந்து செல்லும்போது, பனிக்கட்டிகள் நொறுங்கிக் கரகரப்பது கேட்டது.

“நஹோத்கா? நீ ஏற்கெனவே அரசியல் குற்றத்துக்கு ஆளான பேர்வழியில்லை” என்று கேட்டான் அதிகாரி.

“ஆமாம், ராஸ்தோவில் ஒருமுறை; கராத்தவில் ஒரு தடவை, ஆனால் அங்கே போலீஸ்காரர்கள் மரியாதையோடு நடந்துகொண்டார்கள்!”

அதிகாரி தனது வலது கண்ணை மூடி, அதைத் தேய்த்துவிட்டுக்கொண்டான். பிறகு அவன் தனது சிறிய பற்களை வெளிக் காட்டிக்கொண்டே கேட்டான்,

- “தொழிற்சாலையில் சட்டவிரோதமான பிரசுரங்களில் வினியோகித்த போக்கிரிகள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?”

ஹஹோல் லேசாகச் சிரித்தான், உடம்பை ஆட்டிக்கொண்டான், அவன் ஏதோ பதில் சொல்ல முனையும்போது, மீண்டும் நிகலாய் குறுக்கிட்டுச் சத்தமிட்டான்.

“போக்கிரிகளையே நாங்கள் இப்போதுதான் பார்க்கிறோம்!”

ஒரே சவ அமைதி; ஒரு கணத்துக்கு ஸ்தம்பித்த சர்வ அமைதி நிலைத்தது.

தாயின் நெற்றியிலிருந்த வடுப்பாகம் வெளிறிட்டுப் போயிற்று: அவளது வலது புருவம் மேல் நோக்கி நெரிந்து உயர்ந்தது. ரீபினின் கரிய தாடி விபரீதமாக நடுநடுங்கியது; அவன் அந்தத் தாடியைக் கைவிரல்களால் கோதிக் கொடுத்துக்கொண்டே தலையைக் குனிந்தான்.

| “இந்த நாயை வெளியே கொண்டுபோ!” என்று கர்ஜித்தான் அதிகாரி.

இரு போலீஸ்காரர்கள் நிகலாயின் கைகளைப் பற்றிப் பிடித்து, அவனைப் பலவந்தமாகச் சமையல் கட்டுக்குள் தள்ளிக்கொண்டு போனார்கள், அங்கு சென்றவுடன் அவன் தன் கால்களைத் தரையில் அழுத்தி ஊன்றி அசைய மறுத்தான்.

“நிறுத்துங்கள்!” என்று கத்தினான்; “நான் என் சட்டையைப் போட்டுக் கொள்ளவேண்டும்!"