பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

மக்சீம் கார்க்கி


“நில்லு, பாவெல்” என்று கத்திக்கொண்டே, அவள் மேஜையை நோக்கி விரைந்தாள். “நீங்கள் இவர்களை ஏன் இட்டுச் செல்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

“வாயை மூடு! அது உன் வேலையல்ல!” என்று அதிகாரி ஆவேசத்தோடு எழுந்து சத்தமிட்டான். “கைதான வெஸோவ்ஷிகோவைக் கொண்டுவாருங்கள்!”

பிறகு அவன் ஏதோ ஒரு காகிதத்தைத் தனது மூக்கினருகே கொண்டுபோய் வாசிக்க ஆரம்பித்தான்.

போலீஸார் நிகலாயைக் கொண்டு வந்தார்கள். அதிகாரி வாசிப்பதை நிறுத்திவிட்டுக் கத்தினான்.

“உன் தொப்பியைத் தூர எடு”

ரீபின் பெலகேயாவிடம் வந்து, முழங்கையால் அவளை லேசாக இடித்துவிட்டுச் சொன்னான்.

“அம்மா, அதைரியப் படாதே.”

“என் கைகளை பிடித்துக்கொண்டால், தொப்பியை எப்படி எடுப்பதாம்?” என்று அந்த அதிகாரி வாசித்த வாக்கு மூலத்தை அமுங்கடிக்கும் குரலில் சத்தமிட்டான், நிகலாய்.

“இதிலே கையெழுத்துப் போடு” என்று கையிலிருந்த காகிதத்தை மேசைமீது எறிந்துவிட்டு, கத்தினான் அதிகாரி.

அவர்கள் கையெழுத்திடும்போது, தாய் அவர்களைக் கவனமாகப் பார்த்தாள்; அப்போது அவளது கோபம் தணிந்துவிட்டது; உணர்ச்சி உள்ளடங்கிவிட்டது. அவளது கண்களில் பலவீனமான துயர நிலையால் ஏற்பட்ட கண்ணீர்தான் நிரம்பித் ததும்பி நின்றது. அவளுக்குக் கல்யாணமானதிலிருந்து இருபது வருஷ காலமாக, இந்த மாதிரி எத்தனையோ தடவை கண்ணீர் விட்டிருக்கிறாள்; எனினும் கடந்த சில வருஷங்களாக, கண்ணீரின் வேதனையை மறந்திருந்தாள். அந்த அதிகாரி அவளைப் பார்த்தான்; பிறகு துவேஷபாவம் கொண்ட வறட்டுப் புன்னகையோடு சொன்னான்:

“தாயே! உன் கண்ணீரை மிச்சப்படுத்தி வை; இல்லையென்றால், பின்னால் அழுது தீர்க்கக் கண்ணீரே இருக்காது!”

அவளுக்கோ மீண்டும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

“ஒரு தாய்க்கு எதற்கும், எத்தனை தடவை வேண்டுமானாலும், சிந்தித் தீர்க்க கண்ணீர் உண்டு, உங்களுக்கு ஒரு தாய் இருந்தால், அப்போது தெரியும்!”