பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

vii

மக்சீம் கார்க்கி - வாழ்க்கைக் குறிப்பு

உலகப் புகழ்பெற்ற இலக்கியப் படைப்பாளர்கள் வரிசையில் முன் நிற்பவர் மக்சீம் கார்க்கி.

இங்கிலாந்தில் தொழிற்புரட்சிக்குப் பின்னர் புதிய இலக்கிய வகைகளும் உத்திகளும் தோன்றின. தொழிற்சாலை முறை (Factory System) தோற்றுவித்த அவலங்கள் - சுரண்டல், வறுமை, பிணி, ஏற்றத்தாழ்வுகள், சமூகக் கொடுமைகள் பற்றிப் பாடல்களும், சிறுகதைகளும் புதினங்களும் வெளிவந்தன. பழைய செய்யுள் முறை சிறிது சிறிதாக முக்கியத்துவம் இழந்தது. சிறுகதைகளும் புதினங்களும் இடம்பெற்றன.

மத்திய காலத்தில் இத்தாலியில் லியனார்டோ -டா- வின்சி கண்ட மறுமலர்ச்சி இயக்கம் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பரவிச் செல்வாக்குப் பெற்று ரஷ்ய நாட்டையும் பாதித்தது. 1648 இல் இங்கிலாந்திலும் 1789 இல் பிரான்ஸிலும் நடந்த புரட்சிகள் மிக முக்கியமானவை. அவை சமுதாயத்தில் பழைய அரசியல் அமைப்புமுறை மாறிப் புதிய அமைப்பு முறை ஏற்பட வழிகோலின. உலக மக்கள் முழுமைக்குமான உரிமைகளையும் கடமைகளையும் தேவைகளையும் வகுத்து வரையறை செய்ததோடு, மக்களது நாட்டம் அவற்றை அடைவதை நோக்கியே இருக்க வேண்டும் என்னும் நிலைமையை உருவாக்கின. இந்த நிலைமையே புதிய இலக்கியம் தோன்றுவதற்கு உந்து சக்தியாக வளர்ந்தது.

இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட சமுதாய மாற்றங்களைப் பிரதிபலிக்க ஐரோப்பிய நாடுகளில் எல்லா மொழிகளிலும் இலக்கியங்கள் தோன்றின. இவை மக்களுடைய வாழ் நிலைகளை உள்ளது உள்ளவாறே எடுத்துக்காட்டின.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹெகல் (HEGEL) என்னும் சிந்தனையாளர் சமுதாய மாற்றங்கள் கருத்துகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு மோதுவதால் ஏற்படுகின்றன என்றார். ஆனால் அவரைப் பின்பற்றிய