பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

மக்சீம் கார்க்கி


பற்களால் கடித்துக் குதறுவேன். அவர்கள் வேண்டுமானால் என்னைக் கொன்று தீர்க்கட்டும்; அத்துடன் இந்த உயிர் போகட்டும்!

“நீ ஒரு நோஞ்சான். சண்டைக்கே லாயக்கில்லை” என்றாள் தாய்.

“இருந்தாலும் சண்டை போடத்தான் செய்வேன்!” என்று அடி மூச்சுக் குரலில் பதிலளித்தான் பியோதர்.

பியோதர் போன பிறகு தாய் பாவெலை நோக்கிச் சொன்னாள்: “எல்லோரையும்விட இவன்தான் முதலில் ஓடப்போகிறான்.”

பாவெல் பதில் பேசவில்லை.

சில நிமிஷ நேரத்தில், சமையலறைக்கு அடுத்துள்ள வாசற் கதவு திறக்கப்பட்டது. ரீபின் உள்ளே வந்தான்.

“வணக்கம்!” என்று இளஞ்சிரிப்போடு சொன்னான் அவன். “நான் பழையபடி வந்துவிட்டேன். நேற்று ராத்திரி அவர்கள் என்னைக் கொண்டு வந்தார்கள்; இன்று நானாக வந்திருக்கிறேன்.” அவன் பாவெலின் கையைப் பிடித்துக் குலுக்கினான்; பெலகேயாவின் தோளில் கையைப் போட்டுக்கொண்டான்.

“எனக்குத் தேநீர் கிடைக்குமா” என்று கேட்டான்.

அடர்ந்து வளர்ந்த கரிய தாடியும், கறுத்த கண்களும் கொண்ட அவனது அகன்ற பழுப்பு முகத்தைக் கண்களால் மெளனமாய் அளந்து நோக்கினான் பாவெல். அவனது அமைதியான பார்வையில் ஏதோ ஓர் அர்த்தம் தொனித்தது.

தாய் தேநீருக்குத் தண்ணீர் போடுவதற்காக அடுக்களைக்குச் சென்றாள். ரீபின் உட்கார்ந்து, தனது முழங்கைகளை மேஜை மீது ஊன்றி பாவெலையே பார்த்தான்.

“சரி” என்று ஏதோ ஒரு சம்பாஷணையில் குறுக்கிட்டுப் பேசும் தோரணையில் பேச ஆரம்பித்தான் அவன், “உன்னிடம் நான் ஒளிவு மறைவில்லாமல் சொல்ல விரும்புகிறேன். உன்மீது கொஞ்ச காலமாய் எனக்கு ஒரு கண்தான். நானும் உனக்குப் பக்கத்து வீட்டிலேதான் குடியிருக்கிறேன். உன் வீட்டுக்கு நிறையப்பேர் வந்து போவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் குடிப்பதைக் காணோம்; கூச்சலையும் காணோம். அதுதான் முதல் காரணம். கலாட்டா பண்ணாமல் இருக்கிறவர்களை எல்லாரும் உடனே கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஏனடா இப்படி இருக்கிறார்கள்? என்று அதிசயப் படுகிறார்கள். நான் ஒதுங்கி வாழ்கிறேனா, அது அவர்கள் கண்களை உறுத்திவிட்டது!"