பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

79


அதுதான் சங்கதி!” என்று மேஜையை அறைந்துகொண்டே சொன்னான் ரீபின். “அவர்கள் உண்மையான கடவுளைக்கூட நம்மிடமிருந்து பிடுங்கிக்கொண்டுவிட்டார்கள்! நம்மைத் தாக்குவதற்கு, எல்லாவற்றையும் தமது கைக் கருவியாக மாற்றிக்கொண்டுவிட்டார்கள்! அம்மா, ஒரு கணம் சிந்தித்துப்பார். கடவுள் தன் உருவம்போலவே மனிதனையும் படைத்தான் என்கிறார்களே, அதற்கு என்னம்மா அர்த்தம்? கடவுள் மனிதனைப்போல் இருக்கிறார், மனிதன் கடவுளைப் போல் இருக்கிறான் என்பதுதானே. ஆனால், இன்றோ நாம் கடவுள் மாதிரி இல்லை. காட்டு மிருகங்கள் மாதிரி இருக்கிறோம். தேவாலயத்தில் பூச்சாண்டிதானம்மா இருக்கிறது; நாம் நமது கடவுளை மாற்றியாக வேண்டும்; புனிதப்படுத்தியாக வேண்டும்; அவர்கள் கடவுளைப் பொய்யாலும் புனை சுருட்டாலும் மூடி மறைத்துவிட்டார்கள், நமது உள்ளங்களைக் கொன்று குவிப்பதற்காக, அவர்கள் கடவுளது திரு உருவத்தையே பாழாக்கிவிட்டார்கள், அம்மா !”

அவன் அமைதியாகவே பேசினான்; எனினும் அவனது பேச்சின்- ஒவ்வொரு வார்த்தையும் காதில் பலத்த அறைபோலத் தாக்கி ஒலித்தது. கறுத்த தாடிக்குள்ளாக தெரியும் அவனது முகத்தின் நிழலாடிய துயரத்தைக் கண்டு பயந்தாள் அவள். அவனது கண்களின் இருண்ட ஒளியை அவளால் தாங்க முடியவில்லை ; அந்த ஒளி அவளது இதயத்தில் ஏதோ ஒரு வேதனையை எழுப்பியது.

“இல்லை, இல்லை. நான் இங்கிருந்து போய்விடுகிறேன்” என்று தலையை ஆட்டிக்கொண்டே சொன்னாள் தாய்; “இந்த மாதிரி விஷயங்களைக் கேட்கவே எனக்குச் சக்தி போதாது, போதாது!”

அவள் சமையலறைக்குள் விரைந்து சென்றுவிட்டாள். அவள் சென்றவுடன் ரீபின் பாவெலை நோக்கிச் சொன்னான்: “பார்த்தாயா, பாவெல்? இந்த விஷயங்களுக்கு ஆதாரம் இதயமே தவிர, மூளை அல்ல. மனித மனத்தில், வேறு எதுவும் இல்லாத ஓர் இடத்தில், இந்த இதயம் இருக்கிறது!”

“அறிவுதான் மனிதனை விடுதலை செய்யும்” என்று {{SIC|உறுதியோடு|உறதியோடு} சொன்னான் பாவெல்.

“ஆனால் அறிவு மனிதனுக்குப் பலம் தருவதில்லை ” என்று உரக்கச் சொன்னான் ரீபின். “இதயம்தான் மனிதனுக்குப் பலம் தருகிறது. அறிவு அல்ல.”

தாய் தன் ஆடையணிகளைக் களைந்து மாற்றிவிட்டு பிரார்த்தனைகூடச் செய்யாமல் படுக்கப் போய்விட்டாள். அவளுக்குக்