பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

மக்சீம் கார்க்கி


குளிராகவும், வெறுப்பாகவுமிருந்தது. ஆரம்பத்தில் புத்திசாலியாகவும், மனதுக்குப் பிடித்தவனாகவும் தோன்றிய ரீபின் மீது இப்போது பகைமை உணர்ச்சி உண்டாயிற்று.

அவன் பேசுவதைக் கேட்ட சமயத்தில் தனக்குள் நினைத்துக்கொண்டாள்:"மதத்துரோகி! குழப்பவாதி! இவன் ஏன் இங்கு வந்து தொலைந்தான்?”

ஆனால் அவனோ நம்பிக்கை தோய்ந்த குரலில் அமைதியுடன் பேசிக்கொண்டே போனான்.

“அந்தப் புனிதமான இடத்தைக் காலியாக விடக்கூடாது பாவெல், மனித இதயத்தில் கடவுள் குடியிருக்கும் இடம் ஒரு வேதனை இல்லம். அங்கிருந்து அவரைப் பிடுங்கியெறிந்தால், அந்த இடத்தில் படுகாயம் ஏற்படும். எனவே அவ்வில்லத்தில் ஒரு நம்பிக்கையை, மனித குலத்தின் நண்பனான ஒரு புதிய கடவுளைப் படைக்க வேண்டும். அது தான் சங்கதி.”

“கிறிஸ்து இருந்தாரே!” என்றான் பாவெல்.

“கிறிஸ்துவுக்கு ஆத்மபலம் கிடையாது, ‘இந்தக் கோப்பை என் கையைவிட்டுப் போகட்டும்’ என்றார் அவர். அவர் சீசரை ஆமோதித்து ஒப்புக்கொண்டார். மனிதர்களிடையே மனித ஆட்சியைக் கடவுள் எப்படி ஆமோதிக்க முடியும்? கடவுள்தான் சர்வ வல்லமையும் பொருந்தியவராயிற்றே. அவர் தமது ஆத்மாவைத் துண்டுபடுத்திப் பேசமுடியாது. இதுதான் கடவுள் சித்தம். இதுதான் மனித சித்தம் என்று பாகுபாடு செய்ய முடியாது. ஆனால் கிறிஸ்துவோ வியாபாரத்தை ஒப்புக்கொண்டார்; திருமணத்தை ஒப்புக்கொண்டார். மேலும், அத்தி மரத்தை அவர் சபித்தது இருக்கிறதே—அது தவறான காரியம். கனி தராதது மரத்தின் தவறா? அது போலவே மனத்தில் நலம் விளையாததற்கு அந்த மனம் பொறுப்பல்ல. எனது இதயத்தில் நானாகவா, விதையூன்றித் தீமையை வளர்த்தேன்?”

இருவரது பேச்சுக்களும் ஒன்றையொன்று கவ்விப்பிடிப்பது மாதிரி உணர்ச்சி வசமான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன. பாவெல் மேலும் கீழும் நடந்துலாவும்போது தரையில் காலடி ஓசை எழும்பியது. பாவெல் பேசும்போது வேறு எந்தச் சப்தமும் ஓங்கி ஒலிக்கவில்லை. அவனது குரலே உயர்ந்து ஒலித்தது. ரீபினோ அமைதியும் ஆழமும் நிறைந்த குரலில் பேசினான். அவன் பேசும்போது, கடிகாரப் பெண்டுல ஓசைகூட, வெளியே சுவர்களில் விழுந்து வழியும். பனிமழையின் ஓசையும்கூட தாயின் செவியில் நன்றாகக் கேட்டன.