பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

ளும் தருவதாகச் சொல்லி, அவர்களை மடாதிபதியிடம் போகாமல் இருக்கும்படி கேட்டுக் கொண்டாள். அவர்கள் அவள் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் வேறு எங்காவது போய்த் திரும்பி வந்து, மழை பெய்யாமல் இருப்பதற்குக் காரணம் வில்லழகனும் பொன்னழகியும் உயிருடன் இருப்பதுதான் என்றும், அவர்களைக் கொன்றால், தெய்வங்களின் கோபம் தீர்ந்து மழை பொழியும் என்றும் மடாதிபதி கூறியதாகக் கூறவேண்டும் என்றும் அவள் தன் திட்டத்தை விளக்கினாள்.

ஆசைபிடித்த அந்த அதிகாரிகள் அவ்வாறே செய்தார்கள். அரசாங்கச் செலவில் உல்லாசமாகப் பல ஊர்களில் சுற்றித் திரிந்து விட்டுத் திரும்பி வந்தார்கள். வில்லழகனையும் பொன்னழகியையும் வெட்டிப் பலியிட்டால் தான் தெய்வ கோபம் தீர்ந்து, மழை பொழியும் என்று மடாதிபதி கூறியதாகச் சொன்னார்கள்.

மூட நம்பிக்கையுடைய அந்த அரசன் அவர்கள் கூறியதை உண்மை என்று நம்பினான். ஆனால், தன்மக்களைத் தானே எப்படிக் கொன்று பலியிடுவது என்று தயங்கினான். ஆனால் வசீகர சுந்தரி அவனுடன் பல விதமாய்ப் பேசி அந்தச் சிறு பிள்ளைகளைத் தெய்வபலி கொடுப்பதற்கு அரசன் ஒப்புக் கொள்ளும்படி செய்து விட்டாள்.