இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அடுத்த நாள் பொழுது விடிந்தது. ஊர் மக்கள் திரண்டு வந்து அந்த நான்கு காணி நிலத்தையும் சுற்றிக் கூடி நின்றார்கள். முதல் நாள் நினைத்ததுபோல் மக்கள் அன்று நினைக்கவில்லை. முதல்நாள் வெற்றிவேலன் சாகப் போகிறான் என்று நினைத்தார்கள். அன்றோ அவன் எப்படி வெல்லப் போகிறான் என்று காணவேண்டும் என்ற ஆவலோடு நின்றார்கள். அவன் வெற்றி பெறவேண்டும் என்று அவர்களின் நெஞ்சங்கள் துடித்துக் கொண்டிருந்தன.
அரசர் தன் மகளுடனும் மகனுடனும் வந்து மேடையில் அமர்ந்து விட்டார். சிறிது நேரத்தில் வெற்றிவேலனும் தன்னைச் சுற்றி ஐம்பது வீரர்கள் புடைசூழ்ந்துவர வந்து சேர்ந்தான். அவன் களத்திற்குள் நுழைந்தவுடனேயே அரண்மனை ஆட்கள் ஒரு கூடையைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அந்தக்கூடை நிறையப் பறக்கும் மாயப் பாம்புகளின் பற்கள் நிறைந்திருந்தன.