47
பார்த்த மேகமாலை, “மரக்கலத்தில் உங்கள் வீரர்கள் வரட்டும். நாம் தங்கக் குதிரையிலேயே செல்வோம்” என்றாள்.
“எப்படி?” என்று கேட்டான் வெற்றிவேலன்.
“இப்படித்தான்!” என்று சொல்லி அவள் சில மந்திரங்களைத் தங்கக் குதிரையின் காதில் கூறினாள். உடனே அது தன் இறக்கைகளை அசைத்தது. அதற்கு மூச்சு வந்து விட்டது. அரசரிடம் விடைபெற்றுக் கொண்டு வெற்றிவேலனும் மேகமாலையும் தங்கக் குதிரையில் ஏறி உட்கார்ந்தார்கள். அது தாவிப் பாய்ந்து வானில் ஏறி மேகமண்டலங்களின் வழியாகச் சென்றது. வெற்றிவேலன் நாட்டை நோக்கிப் பறந்தது.
வெற்றிவேலனின் சிற்றப்பன் அன்று அரண்மனை உப்பரிகையின்மேல் காற்று வாங்கிக் கொண்டு நின்றுகொண்டிருந்தான். அப்போது வானில் ஒரு மின்னல் ஒளி தோன்றியது. நிமிர்ந்து பார்த்தான். தாவிப் பாய்ந்து தங்கக் குதிரை பறந்து வருவதைக் கண்டான். அதன்மீது ஓர் இளவரசியுடன் தன் அண்ணன் மகன் ஏறிவருவதைக் கண்டான்.