பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தாவோ - இயற்கை நெறி

நானிலத்தின் வனப்புகள் அனைத்தும் ஞாயிற்றால் பிறந்தவையே, அதைப் போல் மானுடத்தின் மேன்மைகள் எல்லாம் பெண் ஆணால் சிறந்தவையே. வாழ்வின் குறிக்கோளே மானுடத்தை உயர்த்துவது தான் இயற்கையில் நீர் நெருப்பு, காற்று, மண் விண் அனைத்துமே சிறப்புயர்வுடையன. இயங்குதிணை இயங்காத்திணை அத்துணையுமே மானுடத்தின் பல்கலைக் கழகம். மானுடம் என்றும் புதிதான இயற்கையின் மூலமுதல். அது ஆண்பெண் ஆக அனைத்துயிரிலும் இயங்குகிறது.

மானுடத்துக்கு அருமை யானது எது? வாழ்க்கை. வாழ்க்கைக்கு உறுதுணையாவது பெண். பெண் ஆணின் பிணைப்பில் - நட்பில் - தோழமையில் அன்பின் மகிழ்ச்சி சிறக்கிறது, இன்பம் பிறக்கிறது. நம்பிக்கை திறக்கிறது. ஆண் பெண்ணின் உள்ளத்து ஒத்திசைவால் மானிலம் மாண்புறுகிறது மானுட நெஞ்சாங்குலையை இயக்கும் மூச்சுப் பைகள் ஆணும் பெண்ணும் ஆவர். மண்ணில் எறும்பு முதல் யானைவரை இயல்பாக இயங்குவது போலவும் விண்ணில் புள்ளினங்கள் பறப்பன போலவும். தண்ணீரில் மீன்கள் நீந்துவன போலவும் ஆண் பெண் அன்புறவில் வாழ்வதும் திளைப்பதும் மிகமிக எளிதானது அருமையானது, இனிமையானது