பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35


ராமையாவின் கையிலிருந்த கழி சுழன்றது.

கிழவன் மேனியில் அக்கழி விளையாடியது.

பாவம், அவன் புழுவாகத் துடித்தான். சாவின் சந்நிதியை நெருங்கிக் கொண்டிருந்த அவனால் அந்த அடிகளையும் உதைகளையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. "ஐயா! என்னை மன்னிச்சிடுங்க ஐயா! என் பெஞ்சாதி காய்ச்சலாக் கிடக்குது. அந்தக் கிழவிக் கோசரம் தான் கொஞ்சம் சோறும் குழம்பும் வாங்கி முடிஞ்சுக்கிட்டேன. நான் செஞ்சது தப்புத்தான், ஆனாலும். இந்தப் பாழும் வயிற்றுக்குப் பொய்யும் நியாயமும் எங்கே தட்டுப்படுது?—அதுக்குக் கவலை யெல்லாம் அதோட பசிதானே ஐயா!...என்னை மன்னிச்சுப்பிடுங்க! உங்களுக்குப் பசியைப் பற்றித் தெரியாது! ஆனதாலே, பசியை அறிஞ்ச என்னை இந்தத் தடவை மன்னிச்சுப்பிடுங்க ஐயா !..." என்று கதறினான் கிழவன்.

ஆனால் ராமையாவின் செவிகளில் அந்த ஏழை சொல் விழவில்லை. கிழவன் ஒளித்து வைத்திருந்த சோற்றை—குழம்பு கலந்த சோற்றை அவிழ்த்து அண்டாவில் கொட்டினான்.

இதைக் கண்டதும் அந்தக் கிழவனுக்கு நெஞ்சு கொதித்தது. தன்னை மீண்டும் அடிக்க வந்த ராமையாவை நோக்கி! "இந்தப் பாவம் தெய்வத்துக்கே அடுக்காது ஐயா ! புண்ணியம் சம்பாதிக்கிறதுக்கு அன்னதானம் செய்வாங்க. ஆனால்,