வாழ்த்துரை
பைந்தமிழ் அருவி; பரணி பாடும் போர் வீரர், பண்டைத் தமிழரின் மரபெடுத்துப் பாடி வீடமைத்திடும் போர் முரசம், பைந்தமிழ்க் காவலர் பெருந்தகை பேரா சிரியர் அவர்களின் பேருரைகள் தமிழர்களின் போர்க் கவசங்கள். பேராசிரியர் அவர்கள் ஆற்றுகிற உரைகளில் பாடம் படித்தோர் ஏராளம்; பயிற்சி பெற்றுப் பேச்சுத் திறன் பெற்றோர் எண்ணற்றவர்.
வற்றாத நீரூற்றாய்ப் பாய்ந்து வரும் கருத்துக்கு உரிமை யாளர் பேராசிரியர். தமிழர்கள் வாழுமிடமெல்லாம் அவரது கவனம் திரும்பும்.
இனமானம், தன்மானம்-இந்தச் சொற்கள் பேராசிரி யரின் இதய உறுப்புகள். தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தலை நிமிர்ந்து வாழப் போர்க்குரல் தொடுப்பவர் பேராசிரியர்.
மராட்டிய மண்டலத்தின் தலைநகராம் பம்பாயில் தமிழ்ப் பெருங்குடி மக்களிடையே பேராசிரியர் அவர்கள் ஆற்றிய உரை 'திராவிடத்தின் குரல்' எனும் தலைப்பில் நூலாக வருகிறது.
தி.மு.கழகத்தின் செயல்மறவரான, இசைக்குயில் எனது கெழுதகை நண்பர் கோட்டை சாமி அவர்கள் தமது தமிழ்க்கொடி பதிப்பகத்தின் முதல் வெளியீடாக இந்நூலை வெளியிடுகிறார்; இஃது இவரது ஆர்வமிக்க, ஆற்றல் மிக்க முதல் முயற்சியாகும். நெஞ்சாரப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
135, தெற்கு ரதவீதி திருவில்லிபுத்தூர்-626125 அன்பன்
ச.அமுதன் தி.மு.க. தலைமை இலக்கிய அணிச் செயலாளர்
4