61
________________
61 ஆங்கிலேயர் ஆட்சி பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராகச் செயற்படவில்லை என்றாலும், பலவகுப்பாரும் பொதுவான கல்வி கற்கும் நிலை தோன்றியதாலும், பல்வேறு வளர்ச்சி மாற்றங்கள் உருவானதாலும், அன்றையச் சமுதாயச் சூழ்நிலை மாறியுள்ளது. "எல்லாச் சாதித் தடைகளையும் உடைத்து எறிவதற்கும், தாழ்த்தப்பட்ட மக்களைக் கைதூக்கி விடுவதற்கும் சமூகச் சீர்த்திருத்தம் மேற்கொள்வதற்கும் இதைவிட உகந்த தருணம் கிடைக்கவே கிடைக்காது. சாதியை ஒழிக்க சமூகச் சீர்திருத்தத்திற்கு வழி காண இது நல்ல சந்தர்ப்பம். சமுதாய மாற்றம் ஏற்படுத்தும் திருப்பம் ஒரே ஒரு முறைதான் வரும். மனித வாழ்வில் கிடைக்கும் ஒரேயொரு சந்தர்ப்பம் இது. இல்லையேல் துன்பப்படுகுழியில் விழுந்து நமது மக்கள் என்றென்றும் தவிப்பர்" என்று தியாகராயர் சொல்கிறார். அதன் மூலம் திராவிடத்தில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தினார். அதுவே தென்னாட்டில் தமிழ்நாட்டில் ஒரு மறுமலர்ச்சி உருவாவதற்கு வித்திட்ட செயலாகும். உண்மையில் இந்தியாவில் இரண்டு இறைத் தத்துவ வழிக் கருத்துக்கள் நிலவுகின்றன. ஒன்று தெய்வங்களைத் தம்முடைய ஆதிக்கத்திற்குக் கருவிகளாக வைத்துக் கொண்டு பயன்படுத்துதல். இன்னொன்று தெய்வம் என்பது பேராற்றல் மிக்கது. அதற்கு நாம் அடிமையாகவேண்டும் என்பது. இரண்டிலேயும் எனக்கு ஈடுபாடு இல்லை. தெய்வம் என்பது ஒரு கருத்து, எண்ணம் (conception). அப்படிப்பட்ட எண்ணத்தில், எல்லாம் வல்லவன் இறைவன், எல்லாவற்றையும் படைத்தவன். அவன் நம்மை ஆட்டி வைக்கிறான். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்னும் நம்பிக்கை கொள்வது ஒன்று. இது திராவிடரின் மரபு வழிப்பட்ட நம்பிக்கை. தெய்வம் என் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது; மந்திரம் எனக்குக் கட்டுப்பட்டது. எனவே,