70
________________
70 - பிறவியினால் உயர்ந்தவரும் அல்லர், தாழ்ந்தவரும் அல்லர். மகளிருக்கும் ஆண்களைப் போலவே சம உரிமை வேண்டும். சாதிமத வேற்றுமைகள் நீங்கும் வரை, நாட்டின் ஒற்றுமையைக் காக்க, அனைத்து மத, சாதியினருக்கும் அரசியலில் அவரவர் மக்கள் தொகைக்கேற்றபடி பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். கண்மூடித்தனமான பழக்க வழங்கங்களும் மூடநம்பிக்கைகளும் ஒழியவேண்டும். வேத புராண இதிகாச சாத்திர வழியில் வந்த பழக்க வழக்கங்களால், மனிதனின் பகுத்தறிவை முடக்கும் பார்ப்பனீயத்தை ஒழிக்கும் நிலை உருவாகி வருகிறது. அதனை மக்களிடத்திலே விளக்கிச் சிந்தனைச் சுதந்திரத்தையும், பகுத்தறிவுப் பழக்கத்தையும் வளர்க்க வேண்டும். இவையெல்லாம் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் படிக்கின்ற பேராசிரியர்கள் அறிந்த செய்திகளே. இந்த உணர்வுகளை மக்களிடம் பரப்புவதற்கு நாட்டிலே எவ்வளவு எதிர்ப்பு? பல ஊர்களில் பொதுக் கூட்டம் போட்டுப் பேசமுடியாத நிலைமை கூட இருந்தது. அந்த எதிர்ப்பை எல்லாம் தாங்கிக்கொண்டு இயக்கம் நடத்தப் பெரியாரைவிடத் துணிவு கொண்ட தலைவர் வேறு எவருமில்லை. அறிஞர் அண்ணா நீதிக்கட்சித் தலைவர்களிடத்திலேதான் முதலில் தொடர்புடையவராக இருந்தார். ஆனால், அவர் முதன் முதலாகக் கலந்து கொண்ட சுயமரியாதை மாநாட்டிலே, அந்தக் கொள்கை நாட்டிலே பரவினால்தான், தமிழர்கள் மனிதத்தன்மை கொண்டு தலைநிமிர முடியும் என்று தாம் உணர்ந்ததை விவரித்தார் அதைத் தொடர்ந்து பெரியாருடைய தலைமையை ஏற்றுக்கொண்டு, சுயமரியாதை இயக்கத்திலே ஈடுபட்டு, அதனை மக்களிடம் பரப்பும் பணியில் தம்மை ஒப்படைத்துக் கொண்டார்.