பக்கம்:திருக்குறளில் செயல்திறன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

திருக்குறளில் செயல்திறன்

பெரியர் செய்யார் சிறியர்" எனக் கூறுகிறார். இது நம்மை மகிழ்விக்கிறது.

"செயற்கரிய செய்கலாதார்" எனும் இரண்டாவது அடியில் உள்ள "க" எழுத்திற்கு மாறாக "கு" என்ற எழுத்தை அமைத்தால், பொருள் இன்னும் நன்றாக அமையும். "செயற்கரிய செய்வார் பெரியர்" என்று சொல்லிவிட்டபொழுதே, அப்படிச் செய்யாதவர் சிறியர் என்ற பொருள் அடங்கிவிட்டது. மீண்டும் சிறியர் செயற்கரிய செய்யமாட்டார் என்று சொல்லவேண்டியதில்லை. இது கூறியது கூறல் என்ற குற்றத்தின்பாற்படும். திருவள்ளுவர் இத் தவறை ஒருபோதும் செய்திருக்கமாட்டார்.

கரையான்கள் செய்த பிழையோ, ஏடு எடுத்து எழுதியவர் பிழையோ, அச்சுக்கோப்பவர் பிழையோ இதில் புகுந்திருக்கிறது எனத் தெரிகிறது.

"செயற்கரிய" என்பதைச் "செயற்குரிய" எனக் "க" வைக் "கு" ஆக மாற்றியதும், எவராலும் செய்ய இயலாத பெரிய காரியத்தைச் செய்பவர்கள் பெரியவர்கள் என்றும், எல்லோராலும் எளிதாகச் செய்வதற்குரிய சிறிய காரியத்தையும் செய்ய முடியாதவர்கள் சிறியர் என்றும் பொருளாகிறது. இது செயல்திறனை நன்றாக விளக்கிக்காட்டுவதாக இருக்கிறது. அறிஞர் பெருமக்கள் விரும்பினால் இம் மாற்றத்தைச் செய்யலாம்.

திருக்குறளில் செயல்திறன் மிக விரிவாக, தக்க உவமைகளோடு காட்டப் பெற்றிருக்கிறது. திருக்குறளில் பல இடங்களில் உவமையாகப் பசு, புலி, மான், எலி, நாகம், அன்னம், ஆமை, சிங்கம், காகம், கூகை, முதலை, கொக்கு, புழு முதலியவைகள் வந்து விளையாடுகின்றன.