பக்கம்:திருக்குறளில் செயல்திறன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்

13

என்றாலும் மனிதனைவிட அதிக வலிமை உள்ளதும், மனிதனைவிடப் பெரிய உருவமும், மனிதனைப்போல நூறாண்டு வாழ்வது மாகிய யானைகளைத்தான் செயல் திறனுக்கு உவமையாகக் கூறவேண்டுமென்று எண்ணி, வள்ளுவர் திருக்குறளில் ஒரு யானைக் கூடத்தையே அமைத்து, அதில் எட்டு யானைகளைக் கட்டி வளர்த்திருக்கிறார் என்று தெரிகிறது.

1. பெரியதைச் செய்

செயல்திறனுக்கு நல்லதை எண்ணு, பெரியதை எண்ணு. அழுத்தமாக எண்ணு. ஆழமாக எண்ணு. அப்படியே ஆவாய். முனைந்து செய். வெற்றியா தோல்வியா என்று பாராதே. வாழ்த்தா, வசையா என்று கருதாதே. துணிந்து செய். முயன்று செய், வேட்டைக்குச் செல்வதானால் முயல் வேட்டைக்குச் செல்வதைவிட யானை வேட்டைக்குப் போவது நல்லது என்று கூறுகிறார். முயலை வென்று வெற்றிபெறுவதைவிட யானை வேட்டைக்குப்போய்த் தோல்வி அடைந்தாலும் சிறப்பே என்று வள்ளுவர் கருதுகிறார். ஒருவன் யானை வேட்டைக்குப்போய், யானையையும் கண்டு, குறிபார்த்து வேலையும் வீசி எறிந்து, குறி தவறி, யானையும் பிழைத்தோடிப்போய், வேலையும் இழந்துவிட்டு வெறுங்கையோடு திரும்பி வருகிறவனைப் பார்த்து. 'வீரன்' என்று வள்ளுவர் கூறுகிறார்.

        கான முயலெய்த அம்பினில் யானை
        பிழைத்தவேல் ஏந்தல் இனிது (772)

இக் குறள் சிறுசெயல்களிலே முயன்று வெற்றி பெறுவதைவிட, பெரிய செயல்களிலே முயன்று தோல்வி