பக்கம்:திருக்குறளில் செயல்திறன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

திருக்குறளில் செயல்திறன்


3. அந்த அறச்செயல்களையும் இன்றே செய்! இப்போதே செய்! பின்பு செய்யலாம் என ஒத்திப் போடாதே! ஒத்திப்போட்டால் அதை நீ நினைக்கின்ற காலத்தில் செய்ய முடியாமற் போனாலும் போய்விடும். அப்போது நீ அடையவேண்டிய பலனையும் இழந்து விடுவாய்.

        அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றுஅது
        பொன்றுங்கால் பொன்றாத் துணை. (36)

4. நல்ல வழியில் பொருளைத் தேடு. சிக்கனமாக வாழ்வை நடத்து. எஞ்சிய பொருளைச் சேமித்துவை. அதையும் பாதுகாத்து வை. அப்பொழுதுதான் நட்பும் சுற்றமும் பெருகும். வாழ்வும் ஒளிவீசும். அதுமட்டுமல்ல; பகைவரும் தானே அடங்குவர்.

        செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
        எஃகு அதனிற் கூரியது இல். (759)

5. நல்லவைகளைச் செய்வதிலும் அது வெற்றி பெறும் வழிகளை நன்றாக எண்ணிச் செய்யவேண்டும். ஆராயாமல் ஒரு செயலைச் செய்யத் தொடங்கிவிட்டுப் பின்பு அதை எப்படிச் செய்யலாம் என்று எண்ணுவது நல்லதல்ல. அது வெற்றிபெறத் துணைசெய்யாது.

        எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
        எண்ணுவம் என்பது இழுக்கு, (467)

6. இன்சொல் கூறுதல், நட்புக் கொள்ளுதல், பொருள் வழங்குதல் ஆகிய நற்செயல்களைச் செய்வதிலும் தவறு உண்டாகிவிடும். ஆகவே அவைகளை அதற்கு உரியவரல்லாதவர்களுக்குச் செய்துவிடக் கூடாது.