பொருட்பால்
அரசியல்
39. இறை மாட்சி
1.படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
சேனை, குடிமக்கள், பொருள், அமைச்சர், நண்பர், கோட்டை கொத்தளங்கள் என்று சொல்லப்படும் ஆறு பகுதிகளையும் ஒழுங்கு பெற அமைத்து வைத்துக் கொண்டுள்ளவனே அரசர்களுள் சிறந்தவன் ஆவான்.
கூழ்-உணவு, இங்கே பொருளைக் குறிக்கும்; அரண்-பாதுகாவல்; அரசருள் ஏறு -அரசர்களுள் ஆண் சிங்கம் போன்று சிறந்தவன்.
இறை மாட்சி அரசனுக்குரிய பெருமை. இங்கே சிறப்புப் பற்றி அரசனுக்குக் கூறுகின்றார். எனினும், ஒரு குடும்பத்தின் தலைவர், ஒர் இயக்கத்தின் தலைவர் முதலிய எல்லாத் தலைவர்களுக்கும் இவை பொருந்தும். இவ்விதமே கல்வி, கேள்வி முதலியவைகளையும் கொள்க. 381
2.அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு.
அச்சமில்லாமை, கொடுக்கும் தன்மை, அறிவுடைமை, ஊக்கம் உடைமை ஆகிய இந்த நான்கு குணங்களும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பு ஆகும். 382
3.தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு.
நாட்டினை ஆளும் அரசனுக்கு எதையும் காலம் தாழ்த்தாமல் புரியும் தன்மை, கல்வியுடைமை, துணிவு உடைமை ஆகிய இந்த மூன்று குணங்களும் நீங்காமல் இருத்தல் வேண்டும். 383